டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

* 2-ஆவது போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


* கானல் நீரானது இந்தியாவின் கனவு
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி.
இதனால், தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் இந்தியாவின் 26 ஆண்டு கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் கடைசி நாளான புதன்கிழமை இந்தியா 7 விக்கெட்டுகள் கொண்டு 252 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. எனினும், தென் ஆப்பிரிக்காவின் எல்.கிடி மற்றும் ராபாடாவின் பந்துவீச்சு, இந்தியாவை 151 ரன்களுக்குள்ளாக சுருட்டியது. 2-ஆவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்திய எல்.கிடி ஆட்ட நாயகன் ஆனார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான இந்த 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 113.5 ஓவர்களில் 335 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 94 ரன்கள் எடுத்தார். இந்தியாவில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏறக்குறைய அந்த இலக்கை நெருங்கியது. எனினும், 92.1 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் கோலி சதம் கடந்து 153 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்காவில் மோர்ன் மோர்கெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 91.3 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 80 ரன்கள் எட்டினார். முகமது ஷமி 4 பேரை வீழ்த்தினார்.
சரிந்த விக்கெட்டுகள்: இறுதியாக 287 ரன்கள் வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4-ஆம் நாள் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தை புஜாரா 11, பார்த்திவ் படேல் 5 ரன்களுடன் தொடங்கினர்.
இதில் புஜாரா 19 ரன்களுக்கு வெளியேற, அடுத்த 3 ஓவர்களிலேயே பார்த்திவ் படேலும் அதே ரன்களுக்கு நடையைக் கட்டினார். புஜாராவை அடுத்து வந்த ரோஹித் நிலைத்து ஆட, மறுமுனையில் பாண்டியா 6 ரன்களில் கிடி பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த அஸ்வினும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்தவர்களில் ஷமி 28 ரன்கள் அடிக்க, கடைசி விக்கெட்டாக பும்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். எல்.கிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அபராதம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது தாமதமாகப் பந்துவீசியதாக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 ஓவர்களை அவர்கள் தாமதமாக வீசியதாக, போட்டி ஊதியத்தில் இருந்து கேப்டன் டூ பிளெஸ்ஸிஸுக்கு 40 சதவீதமும், வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.

பேட்டிங்கில் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்து, முன்னிலை பெறத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சரியாகச் செய்தனர். ஆனால், பேட்ஸ்மேன்கள் அணியை 
கைவிட்டுவிட்டனர். நாங்கள் முயற்சித்தோம். குறிப்பாக ஃபீல்டிங் உள்பட. ஆனால், அது வெற்றி பெற போதுமானதாக இல்லை 
-கோலி

கடந்த 5 நாள்களும் கடினமாக உழைத்தோம். பல்வேறு சூழ்நிலைகளில் முன்னணியில் இருந்தோம். விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கு கடினமாக இருந்த இந்த டெஸ்ட், இதுவரை சந்தித்த 
கடினமான போட்டிகளில் ஒன்றாகும். முதல் நாளில் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம். ஆனால், அடுத்த 4 நாள்களும் திறமையை வெளிப்படுத்தி விளையாடினோம் 
-டூ பிளெஸ்ஸிஸ்.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு முறையாகத் தயாராகாமல், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி நேரத்தை வீணடித்ததாலேயே தற்போது தென் ஆப்பிரிக்க தொடரை இழந்துள்ளது 
-இந்திய முன்னாள் 
கேப்டன் பிஷன் சிங் பேடி

* செஞ்சுரியன் மைதானத்தில் இதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வெற்றி இலக்கு 249. அதனை இங்கிலாந்து கடந்த 2000-ஆம் ஆண்டில் எட்டியிருந்தது. அதையடுத்து தற்போது அதிகபட்ச இலக்காக இந்தியாவுக்கு 287 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

* ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரன் அவுட் செய்யப்பட்ட முதல் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா ஆவார். ஒட்டுமொத்த வீரர்கள் வரிசையில் அவர் 23-ஆவது இடத்தில் உள்ளார்.

* முதல் டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர்கள் வரிசையில் 6-ஆவதாக இணைந்துள்ளார் எல்.கிடி. 


சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ் தென் ஆப்பிரிக்கா

113.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 335
மார்க்ரம்-94, ஆம்லா-82, 
டூ பிளெஸ்ஸிஸ்-63
பந்துவீச்சு: அஸ்வின்-4/113, இஷாந்த்-3/46, ஷமி-1/58
இந்தியா
92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 307
கோலி-153, விஜய்-46, 
அஸ்வின்-38
பந்துவீச்சு: மோர்கெல்-4/60, பிலாண்டர்-1/46, 
எல்.கிடி-1/51
2-ஆவது இன்னிங்ஸ் தென் ஆப்பிரிக்கா
91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 258
டி வில்லியர்ஸ்-80, எல்கர்-61, 
டூ பிளெஸ்ஸிஸ்-48
பந்துவீச்சு: ஷமி-4/49, பும்ரா-3/70, இஷாந்த்-2/40
இந்தியா (இலக்கு 287)
50.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 151
ரோஹித்-47, 
ஷமி-28, புஜாரா-19
பந்துவீச்சு: 
எல்.கிடி-6/39, ரபாடா-3/47

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com