தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: தோனி விமரிசனம்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது குறித்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விமரிசித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: தோனி விமரிசனம்

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரையும் 2-0 என இழந்தது.

இதன்மூலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட 9 தொடர்களின் வெற்றிச் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்தியாவை வயிட்-வாஷ் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கவுள்ளது.

அதுபோல, கடைசி போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் தேட இந்தியாவும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டார்.

அப்போது இந்திய அணி தோல்வி குறித்து தோனி பேசியதாவது:

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள தவறுகளை நான் சுட்டிக்காட்ட மாட்டேன். மாறாக இந்த தொடரில் ஏற்பட்டுள்ள நன்மைகளை நாம் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டும்.

ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 20 விக்கெட்டுகள் தேவை. அது தற்போது நடந்துள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. நாம் எங்கு ஆடுகிறோம் என்பது முக்கியமில்லை.

தற்போது நம்மால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்த தருணத்தில் கூடுதலாக ரன்கள் குவிப்பதில் மட்டுமே சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com