மூன்றாவது டெஸ்ட்: பொறுப்பை உணர்வார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்?

2 டெஸ்ட் போட்டிகளிலும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளோம். அதேபோல் 3-ஆவது டெஸ்டிலும் செயல்பட்டு...
மூன்றாவது டெஸ்ட்: பொறுப்பை உணர்வார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்?

‘சொந்த மண்ணில் உள்ள ஆடுகளம் குறித்து நன்கு அறிவோம். அதேபோல், தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக 10 நாள்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டிருக்கும் பட்சத்தில், தற்போதைய தொடர் முடிவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். 2 டெஸ்ட் போட்டிகளிலும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளோம். அதேபோல் 3-ஆவது டெஸ்டிலும் செயல்பட்டு, அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் ரன்கள் குவித்தால் அதுவொரு நல்ல போட்டியாக இருக்கும்.’

ரவி சாஸ்திரியின் பேட்டி உண்மையிலேயே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை முன்பே செய்திருந்தால் தொடரின் முடிவுகள் இந்நேரம் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்திருக்குமா? 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்ற இந்தியா, கடைசியாக தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்துள்ளது.

‘தென் ஆப்பிரிக்க தொடருக்கு முறையாகத் தயாராகாமல், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி நேரத்தை வீணடித்ததாலேயே தற்போது தென் ஆப்பிரிக்க தொடரை இழந்துள்ளது’ என இந்திய அணியை விமரிசித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இனி வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? டெஸ்ட் தொடர் இந்திய அணியின் கையை விட்டுப் போய்விட்டது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி. இதனால், தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் இந்தியாவின் 26 ஆண்டு கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இதுபோல தோற்றிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 

2-வது டெஸ்டில் கோலியின் அணித் தேர்வு பல சர்ச்சைகளை உருவாக்கியது. காயம் காரணமாக சஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பெற்றார். தவனுக்குப் பதிலாக ராகுலும் புவனேஸ்வருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இடம்பெற்றார்கள். ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம்பிடித்தார். ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த மாற்றங்கள் கோலிக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் 3-வது டெஸ்டில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த டெஸ்டில் ரஹானேவும் புவனேஸ்வர் குமாரும் இடம்பிடிப்பார்கள் என்று தெரிகிறது. போட்டி நடக்கவுள்ள ஜொகன்னஸ்பர்க் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தைக் கொண்டுள்ளதால் இந்திய அணி பாண்டியா உள்பட 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. இதனால் அஸ்வின் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறியப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் பார்தீவ் படேலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு. இதனால் இந்திய அணியில் குறைந்தபட்சம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி 3-வது டெஸ்டை எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?

‘3-வது டெஸ்ட் போட்டியும் எங்களுக்கு வழக்கமான ஒன்றுதான். ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்டபோதிலும், 3-வது போட்டியிலும் வெற்றி பெறுவது எங்கள் முக்கிய நோக்கம். ஒவ்வொரு போட்டியிலும் வென்று, டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடிக்க விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு ஆல்ரவுண்டராகவே உணர்கிறேன். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறேன்’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர். இதனால் இந்த டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி ஆக்ரோஷமாக விளையாடும், பலமான அணியுடன் களமிறங்கும் என்பது உறுதியாகிறது. முதல் போட்டியில் அசத்திய என்ஜிடி இந்திய அணிக்குக் கூடுதல் அச்சுறுத்தலாக விளங்குகிறார். கடந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற அதே தெ.ஆ. அணி 3-வது போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இரண்டு டெஸ்டுகளிலும் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களின் சொதப்பல்களால் இந்திய அணி தொடரை இழந்து நிற்கிறது. ‘மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடுவார்கள்’ என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். வெளிநாட்டில் தொடரை வெல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு டெஸ்டிலாவது வென்றால்தான் இந்திய ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள். அதிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஓர் அணி, ஒரு டெஸ்ட் தொடரின் எல்லா போட்டிகளிலும் தோற்பது நல்லதற்கல்ல.

அணி விவரம்

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.

தென் ஆப்பிரிக்க அணி: ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, டுயன் ஆலிவியர், என்ஜிடி.

டெஸ்ட் தொடங்கும் நேரம்: இந்திய நேரம் மதியம் 1.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com