8 விக்கெட்டுகளை வீழ்த்தி போப் சாதனை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு ஆஸி. யு-19 அணி முன்னேற்றம்!

இதுதான் யு-19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாகும்... 
8 விக்கெட்டுகளை வீழ்த்தி போப் சாதனை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு ஆஸி. யு-19 அணி முன்னேற்றம்!

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தாலும் 19 வயதுக்குட்பட்ட ஆஸி. அணி இங்கிலாந்தைத் தோற்கடித்து யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

நியுஸிலாந்தின் குயின்ஸ்டவுனில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் விளையாடின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஆஸி. வீரர்கள் தடுமாறினார்கள். இதனால் 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸி. அணி. கேப்டன் சங்கா அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்து அணியின் சரிவை ஓரளவு காப்பாற்றினார். நியூஸிலாந்தின் பாம்பர், பென்னிங்டன், ஜாக்ஸ் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

எளிதாக இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. 8-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 47 ரன்களில் இருந்தபோதுதான் முதல் விக்கெட் விழுந்தது. ஆனால் அதுவே பெரும் சரிவின் தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்கிற நிலையில் இருந்தபோதுகூட வெற்றியின் அருகில் இருந்தது இங்கிலாந்து. ஆனால் தொடக்க வீரர் பாண்டனின் விக்கெட்டை 58 ரன்களில் வீழ்த்தினார் லெக் ஸ்பின்னர் போப். அதன்பிறகு மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது போப்-புக்கு எளிதாக இருந்தது.

18 வயது லாயிட் போப்-பின் சுழற்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 23.4 ஓவர்களிலேயே 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது இங்கிலாந்து. 9.4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் போப். இதுதான் யு-19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் ஜேஸன் ரால்ஸ்டன், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பப்புவா நியு கினியாவுக்கு எதிராக 15 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே மிகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அச்சாதனையை போப் முறியடித்துள்ளார். 

31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தை ஜனவரி 26 அன்று வங்கதேசத்துக்கு எதிராக விளையாடவுள்ளது. 

இந்த உலகக் கோப்பைப் போட்டி, கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, சில காரணங்களால் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 1998-ஆம் ஆண்டில் யு-19 உலகக் கோப்பை மீண்டும் தொடங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் இப்போட்டி, இந்த ஆண்டு நியூஸிலாந்தில் 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com