'விளையாடு இந்தியா' போட்டி 3,298 பேர் பங்கேற்கின்றனர்

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் முதல் முறையாக நடத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு இடையேயான 'விளையாடு இந்தியா' போட்டியில் 3,298 தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் முதல் முறையாக நடத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு இடையேயான 'விளையாடு இந்தியா' போட்டியில் 3,298 தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31-ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகளில், துப்பாக்கி சுடுதலில் ஜூனியர் உலக சாம்பியன் அனிஷ் பன்வாலா, இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஜெரிமி லால்ரினுங்கா உள்ளிட்ட பிரபல வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக, விளையாடு இந்தியா போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இப்போட்டியில் பங்கேற்க இதுவரை 3,298 பேர் முன்மொழிந்துள்ளனர். மொத்தம் 16 பிரிவுகளில் நடைபெறவுள்ள போட்டிகளில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 4,452 பேர் வரையில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில், தனி நபர் பிரிவில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 10 விளையாட்டுகளும், அணிகள் பிரிவில் கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, கோ-கோ, வாலிபால் ஆகிய 6 விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளில் தில்லி சார்பில் 341 பேர், மகாராஷ்டிரம் சார்பில் 321 பேர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரியாணா தரப்பில் இருந்து அதிகபட்சமாக 350 பேர் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது. இப்போட்டியில் அனைத்து பிரிவுகளிலுமாக மொத்தம் 197 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
தடகள பிரிவில் 640 சிறுவர், சிறுமியர், நீச்சல் போட்டியில் 592 பேர், மல்யுத்தத்தில் 480 பேர், குத்துச்சண்டையில் 400 பேர், ஜிம்னாஸ்டிக்கில் 84 பேர் வரையில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com