ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி டெஸ்ட் 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி டெஸ்ட் 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா இழந்துவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதன் காரணமாகவே தோல்வியைத் தழுவியதாக விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழந்துவிட்டது ரசிகர்களுக்கு வருத்ததை ஏற்படுத்திவிட்டது.
'ஒயிட் வாஷ்' முனைப்பில் தென் ஆப்பிரிக்கா...: இதற்கு முன்பு அந்நாட்டில் கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் 6 முறை அந்த அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்கிறது. ஆனால், ஒரு முறை கூட இந்தியா தொடரைக் கைப்பற்றியதில்லை. அதேநேரம், அந்த அணியிடம் இந்தியா 'ஒயிட் வாஷ்' ஆனதில்லை. ஒரு ஆட்டத்தையாவது டிரா செய்துவிடும்.
எனவே, இந்த முறை இந்தியாவை 'ஒயிட் வாஷ்' செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும். எனவே, இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியா கடைசி டெஸ்டில் தோல்வி அடைய நேரிட்டாலும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அந்த அணி பெற்றுள்ள 'நம்பர் 1' இடத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.


இந்திய அணியில் மீண்டும் மாற்றம்?:

 முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ரஹானேவை அணியில் சேர்க்காமல் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பல்வேறு தரப்புகளிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. தவனுக்குப் பதிலாக லோகேஷ் ராகுலையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் தவன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அவருக்கு மாற்றாக 2-ஆவது டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சமீபகால செயல்பாட்டைக் கருத்தில் கொண்டே ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக கோலி ஆதரவு தெரிவித்திருந்தார். 3-ஆவது டெஸ்டில் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பந்துவீச்சாளர்களில் முதல் டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்ட புவனேஸ்வர் குமாருக்கு 2-ஆவது டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு கடைசி டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போன மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 2-ஆவது டெஸ்டில் இடம்பெற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அணியில் தினேஷ் கார்த்திக்: முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா காயமடைந்ததால் இரண்டாவது டெஸ்டில் அவருக்கு பதிலாக பார்திவ் படேல் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.
தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம் இதுவும் இருக்காது என்றே தெரிகிறது.
இதற்கு முன்பு கடந்த 1992, 1997, 2006, 2013 ஆகிய ஆண்டுகளில் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அவற்றில் ஒன்றில் கூட நமது அணி தோல்வியைச் சந்தித்ததில்லை. 
கடந்த 2006-இல் ராகுல் திராவிட் தலைமையிலான அணி, இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. எனவே, இந்த மைதானம் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மைதானம் எப்படி?
ஜோஹன்னஸ்பர்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் 30ஆயிரம் பேர் வரை கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசிக்க முடியும். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. அவற்றில், முதலில் பேட் செய்த அணி ஒரு முறையும், முதலில் பந்துவீசிய அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
இந்த மைதானத்தில் டெஸ்டில் பதிவான அதிகபட்ச ஸ்கோர் 450/7 ஆகும். இந்த ஸ்கோரை தென் ஆப்பிரிக்காதான் பதிவு செய்தது. குறைந்தபட்ச ஸ்கோரை (83/10) பதிவு செய்ததும் அந்த அணியே என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com