தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைகள் நிகழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்!

அதே சாதனையை இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் நிகழ்த்தியதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைகள் நிகழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.

ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த 3-ஆவது போட்டியில் 241 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா சனிக்கிழமை 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. இந்திய தரப்பில் ஷமி 5, பும்ரா மற்றும் இஷாந்த் தலா 2, புவனேஷ்வர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன், பிலாண்டர் தொடர் நாயகன் விருது வென்றனர்.

இந்த டெஸ்ட் தொடரில் இரு நாட்டு பந்துவீச்சாளர்களும் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். இதுவரை நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் எல்லா விக்கெட்டுகளும் விழுந்ததில்லை. அதிகபட்சமாக 1999-2000-ல் பாகிஸ்தானில் இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் தொடரில் 118 விக்கெட்டுகள் விழுந்தன. அதேபோல 2003-04-லிலும் 2015-லும் இலங்கையில் முறையே ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் விளையாடிய டெஸ்ட் தொடர்களிலும் 118 விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் இப்போதுதான் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல்முறையாக அனைத்து 120 விக்கெட்டுகளும் விழுந்துள்ளன. தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது அந்நாட்டுப் பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய சிரமமில்லை. ஆனால் அதே சாதனையை இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் நிகழ்த்தியதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது.

1986-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2015-ல் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி எதிரணியின் 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தொடரை 2-0 எனவும் இலங்கை தொடரை 2-1 எனவும் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் இந்திய அணி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் டெஸ்ட் தொடரை 1-2 என தோற்றுப்போயிருக்கிறது. 

அதேபோல டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக வேகப்பந்துவீச்சாளர்களின் மூலமாக எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் பிலாண்டர், முகமது ஷமி, ரபாடா என மூன்று பேர் அதிகபட்சமாக தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். பூம்ரா 3 டெஸ்டுகளில் 14 விக்கெடுகளையும் 2 டெஸ்டுகள் விளையாடியவர்களில் புவனேஸ்வர் 10 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 8 விக்கெட்டுகளையும் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். பாண்டியா 3 டெஸ்டுகளில் 3 விக்கெட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com