யு-19 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி...
யு-19 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வழக்கம்போல இந்த ஆட்டத்திலும் தொடக்க வீரர்களான பிருத்வி ஷாவும் மன்ஜோத் கல்ராவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 16-வது ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 89 ஆக இருந்தபோது 41 ரன்களில் ஆட்டமிழந்தார் பிருத்வி ஷா. அடுத்தச் சில ஓவர்களில் மன்ஜோத் கல்ரா 47 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு சுப்மன் கில் தனது திறமையை இந்த ஆட்டத்திலும் நிரூபித்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கடைசி ஓவரில் சதத்தை எட்டினார். 94 பந்துகளில் 102 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் கேட்ச்சுகள் சிலவற்றைத் தவறவிட்டது. ரன் அவுட் வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை. இதனால் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க சாதகமான நிலை உருவானது.

கடினமான இலக்கை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறியது. ஷிவம் மவி, நாகர்கோடி, போரெல் ஆகியோர் துல்லியமான வேகப்பந்துவீச்சில் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்கள். மவி, நாகர்கோடிக்கு விக்கெட்டுகள் கிடைக்காமல் போனாலும் அவர்களிருவரும் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் போரெலால் மறுமுனையில் விக்கெட்டுகளைத் தொடர்ந்து வீழ்த்தமுடிந்தது.

இந்திய அணியினர் கடினமான கேட்சுகளையும் அற்புதமாகப் பிடித்தார்கள். இதனால் பாகிஸ்தான் அணி தப்பிக்க வழியில்லாமல் போனது. கடைசியில் பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இஷான் போரெல் நான்கு விக்கெட்டுகளையும் ஷிவா சிங், ரியான் பராக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். சுப்மன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

203 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியில் அபார வெற்றி கண்ட இந்திய அணி யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com