அம்பட்டி ராயுடு இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

போட்டியின் முடிவை ராயுடு ஏற்காமல், உடனடியாக சூப்பர் ஓவரைத் தொடங்கவேண்டும் என்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார்...
அம்பட்டி ராயுடு இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

சையத் முஸ்டாக் அலி போட்டியில் பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்ட இந்திய வீரர் அம்பட்டி ராயுடு, இரண்டு ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. 

இதனால் விஜய் ஹசாரே போட்டியில் ஹைதராபாத்தின் இரு ஆட்டங்களில் ராயுடுவால் கலந்துகொள்ளமுடியாது. 

ஹைதராபாத் - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான சையத் முஸ்டாக் அலி போட்டியில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இரண்டாவது ஓவரின்போது பந்தை பீல்டிங் செய்த ஹைதராபாத் வீரரின் கால் பவுண்டரி கயிறில் பட்டதால் அதற்கு கர்நாடக அணியின் ஆட்டம் முடிவடைந்தபிறகு பவுண்டரி வழங்கப்பட்டது (சம்பவத்தின்போது நடுவர் அதை பவுண்டரி என அறிவிக்கவில்லை). கர்நாடக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதில் கூடுதலாக இரு ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஹைதராபாத் கேப்டன் ராயுடு எதிர்ப்பு தெரிவித்தார். உடனே நடுவர்கள், ஆட்டம் முடிந்தபிறகு இந்த சர்ச்சையைக் கவனிக்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார்கள். இதனால் ஆட்டம் 9 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. கடைசியில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் சர்ச்சை ஆட்டம் முடிந்தபிறகும் தொடர்ந்தது.

போட்டியின் முடிவை ராயுடு ஏற்காமல், இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் உடனடியாக சூப்பர் ஓவரைத் தொடங்கவேண்டும் என்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அதே மைதானத்தில் அடுத்து விளையாட வேண்டிய ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க ராயுடுவுக்கும் ஹைதராபாத் மேலாளருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ராயுடு இரு ஆட்டங்களில் பங்கேற்க பிசிசிஐ தற்போது தடை விதித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயுடுவை ரூ. 2.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com