ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில்  சச்சின் டெண்டுல்கர் இடம்பெறாதது ஏன்?

இந்தக் கெளரவம் இதுவரை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படாதது ஆச்சர்யத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது... 
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில்  சச்சின் டெண்டுல்கர் இடம்பெறாதது ஏன்?

பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடுக்கு உயரிய அந்தஸ்து அளித்து மரியாதை செலுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து வீராங்கனை கிளார் டெய்லர் ஆகியோரை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) பட்டியலில் இணைத்துள்ளது ஐசிசி. 

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்பது மகத்தான கிரிக்கெட் வீரர்களைக் கெளரவப்படுத்தும் ஓர் அம்சமாகும்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் 

சுனில் கவாஸ்கர் (2009)
பிஷன்சிங் பேடி (2009)
கபில் தேவ் (2010)
அனில் கும்ப்ளே (2015)
ராகுல் டிராவிட் (2018)

இந்நிலையில் இந்தக் கெளரவம் இதுவரை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படாதது ஆச்சர்யத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 13000 ரன்கள் எடுத்த சச்சின், பாண்டிங் ஆகிய இருவரில் பாண்டிங்குக்கு இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சச்சினைத் தவிர்த்தது ஏன்?

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்துள்ள சச்சின் 200 டெஸ்டுகளிலும் விளையாடியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 100 சதங்கள் எடுத்துள்ளார்.  இத்தகையை தன்னிகரற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தும் சச்சினை இதுவரை இந்தக் கெளரவத்துக்கு எண்ணாதது ஆச்சர்யத்தை எழுப்பியுள்ளது. டிராவிட் இந்தக் கெளரவத்துக்கு உரியவர் தான் என்றாலும் சச்சினைத் தவிர்த்ததன் நோக்கம் புரியவில்லை என்று பலரும் ஐசிசியின் முடிவைச் சமூகவலைத்தளங்களில் விமரிசனம் செய்துள்ளார்கள். 

எனினும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இடம்பெற ஓய்வு பெற்று ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும் என்றொரு ஐசிசி விதிமுறை உள்ளது. டிராவிட், பாண்டிங் ஆகிய இருவரும் 2012-ல் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்கள். எனவே அவர்களுக்கு இந்த வருடம் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சச்சின் தனது கடைசி டெஸ்டை 2013 நவம்பரில் விளையாடினார். எனவே அடுத்த வருடம் சச்சின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com