முத்தரப்பு டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
முத்தரப்பு டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ஹராரேவில் நடைபெற்றது. 

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஆர்சி ஷார்ட் மற்றும் பின்ச் அதிரடியான தொடக்கத்தை தந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆர்சி ஷார்ட் 53 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்கள் குவித்தார். பின்ச் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

ஆனால், அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஆமீர் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும், அஷ்ரஃப், ஷாகீன் அப்ரிதி மற்றும் ஹாசன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் ஃபர்ஹான் மற்றும் தலாத் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன் பிறகு கேப்டன் சர்பிராஸ் கான் ஓரளவு அதிரடி காட்டி 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ஃபகார் ஸமானுடன் மாலிக் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஸமான் 46 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

பின்னர், மாலிக் மற்றும் ஆசிப் அலி பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாலிக் 37 பந்துகளில் 43 ரன்களுடனும், அலி 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு டி20 தொடரை கைப்பற்றியது. 

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பாகிஸ்தானின் ஃபகார் ஸமான் தட்டிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com