ரோஹித் சர்மா அதிரடி சதம்: தொடரை வென்று இந்தியா அபாரம்

இங்கிலாந்துடனான கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. 
படம்: ட்விட்டர்/பிசிசிஐ
படம்: ட்விட்டர்/பிசிசிஐ

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில், முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தன. 

தொடரை தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பட்லர் மற்றும் ராய் முதலில் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி ஓவருக்கு 11 ரன்கள் வீதம் குவித்து விளையாடி வந்தது. 

முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பட்லர் 8-ஆவது ஓவரில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த ராய் 31 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பட்லர், ராய் அமைத்து தந்த அடித்தளத்தை சரியாக பயன்படுத்தவில்லை. ஹேல்ஸ் 30, ஸ்டோக்ஸ் 14, பேர்ஸ்டோவ் 25 என வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் ஆட்டமிழந்தனர். 

இதனால், அந்த அணி 220 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்தியா சார்பில் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், கௌல் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடக்கினார். ஆனால், மறுமுனையில் தவான் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் ரோஹித்துடன் சற்று நேரம் தாக்குபிடித்து 19 ரனகள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி சேஸிங்கில் சற்று தடுமாற்றத்தைக் கண்டது. 

அதன்பிறகு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கி வந்தனர். ரோஹித் - கோலி இருவரும் போட்டி போட்டு பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் 9 ஆக இருந்த போதும், இந்த ஜோடி ரன் ரேட்டை 11-க்கு மேல் வைத்தே விளையாடி வந்தது. 

கோலி 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஜோர்டன் பந்தில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியா களமிறங்கினார். 

பாண்டியா வந்த வேகத்தில் வெற்றி இலக்கை அடைவதற்காக ஜெட் வேகத்தில் ரன் குவிக்க தொடங்கினார். மறுதிசையில் ரோஹித் சதம் அடிப்பதற்கு ரன்களை மீதம் வைத்திருப்பாரா என்ற ரீதியில் பாண்டியா கலக்கலாக விளையாடினார். 

மோர்கன் அனைத்து பந்துவீ்ச்சாளர்களை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை. 

பின்னர், ரோஹித் சர்மா ஒருவழியாக 56-ஆவது பந்தில் சதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 3-ஆவது சதமாகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்த 2-ஆவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். 

அதன்பிறகு, பாண்டியா ஜோர்டன் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை அடையச் செய்தார். இந்திய அணி 8 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை ரோஹித் சர்மா தட்டிச் சென்றார்.

அடுத்ததாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 12-ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com