டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி: அந்நிய மண்ணில் தொடரும் கோலி படையின் வெற்றிகள்!

டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி: அந்நிய மண்ணில் தொடரும் கோலி படையின் வெற்றிகள்!

2016 முதல் வேறெந்த அணியாலும் இந்திய அணியை டி20 தொடரில் தோற்கடிக்க முடியவில்லை... 

இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-ம் டி 20 கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 198 ரன்களைக் குவித்தது.  இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹார்திக் பாண்டியா அபாரமாகப் பந்து வீசி 4/38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெளல் 2, சஹார், உமேஷ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தோனி 5 கேட்சுகள் பிடித்தும் ஒரு ரன் அவுட்டை நிகழ்த்தியும் அசத்தினார்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 18.4 ஓவர்களிலேயே 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ரோஹித்தும், 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களுடன் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார் கோலி. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரங்கள்:

* இது இந்திய அணியின் 6-வது தொடர்ச்சியான டி20 தொடர் வெற்றி. கடந்த வருடம் நியூஸிலாந்து அணியை 2-1 என வென்றது. பிறகு இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளையும் வென்றது. இலங்கையில் நடாஹஸ் கோப்பையையும் அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. 

இந்தியாவின் கடைசி 6 டி20 தொடர்கள்/போட்டிகளின் முடிவுகள்

2-1 என நியூஸிலாந்தை இந்தியா வீழ்த்தியது
3-0 என இலங்கையை இந்தியா வீழ்த்தியது
2-1 என தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது
இலங்கை நிடாஹஸ் கோப்பையை இந்தியா வென்றது
2-0 என அயர்லாந்தை இந்தியா வீழ்த்தியது
2-1 என இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியது 

தொடர்ச்சியான டி20 தொடர்களில் வெற்றி

9 - பாகிஸ்தான் (செப்டம்பர் 2016 முதல்)
6 - இந்தியா ( நவம்பர் 2017 முதல்)
5 - மேற்கிந்தியத் தீவுகள் ( ஜூன் 2012 - மார்ச் 2013)

* 2016 முதல் இந்திய அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி மட்டுமே டி20 தொடரில் தோற்கடித்துள்ளது. 2016 முதல் வேறெந்த அணியாலும் இந்திய அணியை டி20 தொடரில் தோற்கடிக்க முடியவில்லை. அதன் விவரம்:

* 2016 மார்ச்: உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. (பிறகு அந்த அணி உலகக் கோப்பையையும் வென்றது).
* 2016 ஆகஸ்ட்: அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியா - மே.இ. அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 1-0 என மே.இ. அணி வென்றது. 
* 2017 ஜூலை: மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் மே.இ. அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

* அதேபோல 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக 9-வது முறையாக தோல்வியடையாமல் உள்ளது. 2016-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது இந்திய அணி. தற்போது இங்கிலாந்தை வெல்லும் வரை 8 தொடர்களை வென்ற இந்திய அணி, கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 எனச் சமன் செய்தது. 

* 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதே கிடையாது. இந்த வகையில் 8-0 என வெற்றி கண்டுள்ளது.

இந்தியா பங்குபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டத்தின் முடிவுகள்

ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2016
இலங்கையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2016
ஜிம்பாப்வேயை 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2016
இங்கிலாந்தை 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2017
நியூஸிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2017
இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2017
தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2018
இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது, 2018

* வெளிநாடுகளில் இந்திய அணியின் தொடர்ச்சியான 5-வது டி20 தொடர்/போட்டி வெற்றி:

இலங்கை: 1-0 என இந்தியா வெற்றி
தென் ஆப்பிரிக்கா: 2-1 என இந்தியா வெற்றி
இலங்கை: நிடாஹஸ் கோப்பையை இந்தியா வென்றது
அயர்லாந்து: 2-0 என இந்தியா வெற்றி
இங்கிலாந்து: 2-1 என இந்தியா வெற்றி

(இதற்கு முன்பு, 2017 ஜூலையில் மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் மே.இ. அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அதுவே இந்திய அணி வெளிநாட்டில் கடைசியாகத் தோற்ற டி20 தொடர். அதன்பிறகு வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com