கடுமையாகப் போட்டியிட்டு தென் ஆப்பிரிக்க வீரரிடம் வீழ்ந்தார் ஃபெடரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

983-க்குப் பிறகு விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற.. 
கடுமையாகப் போட்டியிட்டு தென் ஆப்பிரிக்க வீரரிடம் வீழ்ந்தார் ஃபெடரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இது ஃபெடரர் வெல்லவேண்டிய ஆட்டம். அவர் கைவசம் வைத்திருந்த ஓர் ஆட்டத்தை தாரை வார்த்துவிட்டார். இந்தத் தோல்வியை ரசிகர்களால் மறக்கமுடியுமா?

2 செட்கள் முன்னிலை. ஒரு மேட்ச் பாயிண்ட்.

இப்படி லட்டு போல தனக்குச் சாதகமாக இருந்த ஓர் ஆட்டத்தை எப்படி ஃபெடரரால் தோற்கமுடிந்தது?

நேற்று நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் காலிறுதியில் ஃபெடரரும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் மோதினார்கள். இந்தமுறை ஃபெடரர் எப்படியும் விம்பிள்டனை 9-வது முறையாக வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதேபோல ஃபெடரரும் முதல் இரு செட்களை 6-2, 7-6 என வென்றதோடு மூன்றாவது செட்டில் மேட்ச் பாயிண்ட்டையும் வைத்திருந்தார். ஃபெடரருடன் கடந்த நான்கு முறை மோதிய ஆண்டர்சன் ஒரு செட்டையும் வெல்லமுடியாமல் போனது. இதனால் ஃபெடரர் இந்த ஆட்டத்தில் வெல்வதே இயல்பான விஷயமாக இருந்தது. ஆனால் விளையாட்டு வீரர்களின் மகத்துவமே, எவ்வளவு பெரிய தோல்வியிலிருந்தும் மீள்வதுதானே. அதைத்தான் ஆண்டர்சன் நேற்று வெளிப்படுத்தினார். 

மூன்றாவது செட்டில் 4 பிரேக் பாயிண்டுகள் அதிலும் ஒரு மேட்ச் பாயிண்ட் என எல்லாவிதமான நல்ல வாய்ப்புகளையும் வீணடித்தார் ஃபெடரர். இதனால் மூன்றாவது செட்டை 7-5 என வென்றார் ஆண்டர்சன். 

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஃபெடரர் நேட் செட்களில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது செட்டுக்கு ஆட்டம் நீண்டது. அந்த செட்டில் மேலும் பிரமாதமாக சர்வீஸ் செய்த ஆண்டர்சன் 6-4 என எளிதாக வென்றார்.

நாம் ஒரு மகத்தான ஆட்டத்தைக் காண்கிறோம் என்பதை ரசிகர்கள் உணர்ந்த தருணம் அது. 

கடைசி செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். இழந்த வாய்ப்புகளை மீண்டும் கைவசப்படுத்த ஃபெடரர் விடாது முயற்சித்தார். இதற்கு மேலும் இந்த ஆட்டத்தை வெல்லாமல் இருக்கக்கூடாது என்று ஆண்டர்சனும் ஃபெடரரின் திறமைக்கு இணையாக விளையாடினார். இதனால் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து கிடைத்தது.

கடைசியில் அந்த செட்டில் கிடைத்த ஒரே ஒரு பிரேக் பாயிண்டையும் தனதாக்கிக்கொண்டார் ஆண்டர்சன். இதனால் நீண்ட நெடிய அந்த செட்டை 13-11 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் ஆண்டர்சன். புயல் அடித்து, மழை ஓய்ந்தது போல இருந்தது ரசிகர்களுக்கு. காலத்துக்கும் மறக்கமுடியாத ஆட்டம் இது. 

2-6, 6-7(7), 7-5, 6-4, 13-11 எனக் கடுமையாகப் போராடி வென்ற ஆண்டர்சன், 1983-க்குப் பிறகு விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றில் நடாலிடம் தோல்வியடைந்தார் ஆண்டர்சன். இதனால் இந்தமுறையும் அவர் பெரிதாகச் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com