ரோஹித் சர்மாவைக் காப்பாற்றாத இரு சதங்கள்: டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம் ஏன்?

ரோஹித் சர்மா மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்வுக்குழு... 
ரோஹித் சர்மாவைக் காப்பாற்றாத இரு சதங்கள்: டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம் ஏன்?

சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தேர்வாகவில்லை. எனினும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா டி20, ஒருநாள் என இரண்டிலும் தலா ஒரு சதம் அடித்திருந்தார். இதனால் ஃபார்மைக் கணக்கில் கொண்டு டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வாக வாய்ப்புண்டு எனக் கூறப்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மா மீது தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கை வரவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ரோஹித் சர்மா மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்வுக்குழு. 

ஆனால் ரோஹித் சர்மா இதைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்றே தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தேர்வாகாது குறித்து ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது:

ஒரு வீரராக நீங்கள் இவ்வளவு வருடங்கள்தான் விளையாடமுடியும் என்று உள்ளது. அதில் நான் பாதி முடித்துவிட்டேன். மீதமுள்ள கிரிக்கெட் வாழ்க்கையில் என் தேர்வு குறித்து நான் கவலைப்பட முடியாது. மீதமுள்ள காலங்களைப் பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்பதே என் எண்ணம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இனிமேல் நான் தேர்வாக முடியுமா, முடியாதா என்று கவலைப்படுகிற நிலையில் நான் இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையை நான் அனுபவித்து ஆட வேண்டும். என் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் ஐந்து ஆறு வருடங்கள், நான் அணிக்குத் தேர்வாவது பற்றியே இருந்தது. இப்போது கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறேன். கேள்விகள், சந்தேகங்கள் உங்களிடம் அழுத்தத்தை உருவாக்கும். அதற்குப் பதிலாக, நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை அனுபவித்து செய்யுங்கள்.  20 வயதில் இந்திய அணிக்குத் தேர்வானேன். 26 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். 2010-லேயே டெஸ்டில் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் டெஸ்ட் தொடங்கும் நாளன்று காயம் ஏற்பட்டதால் விளையாட முடியாமல் போனது. உங்களுக்கு எது வேண்டும் என அதிகமாக எண்ணுகிறீர்களோ, அப்போது உங்கள் மனநிலை மாறுகிறது. எதற்கும் நேரம் உண்டு என்பதை பிறகு உணர்ந்தேன். தேர்வுக்குழுவினர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி எண்ணுவதில் அர்த்தமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு நான் தேர்வாகாததில் ஆச்சர்யப்படவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவித்து விளையாடவுள்ளேன். வருத்தப்பட நேரமில்லை. கடந்தகாலத்தில் நிறையவே வருத்தப்பட்டுவிட்டேன். அடுத்து மிக முக்கியமான போட்டிகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவதே சரியானது என்று கூறினார். 

இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தற்போது இரு சதங்கள் அடித்தபிறகும் அவருக்கு டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை 25 டெஸ்டுகள் விளையாடியுள்ள 31 வயது ரோஹித் சர்மா, 1479 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 39.97. இதில் 9 அரை சதங்கள், 3 சதங்கள். 

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார் ரோஹித். 102*, 65, 50* என விளையாடிய மூன்று இன்னிங்ஸிலும் திறமையை நிரூபித்தார். ஆனால் அவருடைய கெட்ட நேரம் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஆரம்பித்தது. முதல் இரு டெஸ்டுகளில் இடம்பெற்ற ரோஹித் சர்மா 11, 10, 10, 47 எனக் குறைவான ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதனால் கோலிக்கும் தேர்வுக்குழுவுக்கும் ரோஹித் மீதான நம்பிக்கை குறைந்தது. இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்டுகளும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகளும் விளையாடவுள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் அளிப்பது வீண் என நினைத்து கருண் நாயருக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள். 

26 வயது கருண் நாயர், 6 டெஸ்டுகள் விளையாடி ஒரு சதம் எடுத்துள்ளார். அதுவும் முச்சதம். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் மோசமாக விளையாடினாலும் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியதால் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதையடுத்து ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கனவு தற்காலிகமாக முற்றுப்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com