துடிப்புமிக்க பிரான்ஸ்; பிரமிக்க வைத்த குரோஷியா

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-ஆவது முறையாக மகுடம் சூடியிருக்கிறது.
துடிப்புமிக்க பிரான்ஸ்; பிரமிக்க வைத்த குரோஷியா

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-ஆவது முறையாக மகுடம் சூடியிருக்கிறது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரேஸில், ஸ்பெயின் இடையேதான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேற, ஆர்ஜென்டீனா, ஸ்பெயின் அணிகள் 2-ஆவது சுற்றோடு நடையைக் கட்டின. மற்றொரு முன்னணி அணியான பிரேஸில் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்திக்க, உலகக் கோப்பையில் முன்னணி அணிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பிரான்ஸ் அணியின் பக்கம் கால்பந்து ரசிகர்களின் கவனம் திரும்பியது.

குரோஷியா மிரட்டினாலும், அனைவரும் எதிர்பார்த்ததைப் போன்று பிரான்ஸ் அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாகை சூடியது. பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், அந்த அணியின் துடிப்புமிக்க இளம் வீரர்கள்தான். முன்களத்தில் கிலியான் மாப்பே, ஆன்டைன் கிரைஸ்மான், ஜிரெளட், நடுகளத்தில் (மிட்பீல்டு) போக்பா, மட்டுய்டி, கோன்டே, பின்களத்தில் உம்டிடி, பவார்டு, வரானே, ஹெர்னாண்டஸ் ஆகியோர் எதிரணிகளை மிரட்ட, பிரான்ஸின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

கடந்த 48 ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற இளம் அணி என்ற பெருமை பிரான்ஸ் அணிக்கு கிடைத்துள்ளது. 1970-இல் பிரேஸில் அணி உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள், 9 மாதங்கள். இந்த உலகக் கோப்பை வெற்றி பிரான்ஸ் அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஏராளமான இளம் திறமைசாலிகளைக் கொண்டுள்ள பிரான்ஸ் அணி, அடுத்த 10 ஆண்டுகள் உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பலாம்.

கிலியான் மாபே, ஆன்டைன் கிரீஸ்மான், போக்பா ஆகியோர் பிரான்ஸ் அணியின் தூண்களாகத் திகழ்ந்தனர். கிலியான் மாப்பே இந்த உலகக் கோப்பையில் 4 கோல்களை அடித்தார். கிரீஸ்மான் 4 கோல்களை அடித்ததோடு, சகவீரர்கள் கோலடிப்பதற்கு இரு முறை உதவினார். மாப்பே, களத்தில் 100 மீ. ஓட்டத்தில் ஓடும் வீரரைப் போன்று வேகமாக செயல்படுவதால், அவர் பந்தை கடத்திச் செல்கிறபோது, அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல அணியின் பின்கள வீரர்கள் திணறியதை இந்த உலகக் கோப்பை போட்டியில் காண முடிந்தது.

இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கோலடித்ததன் மூலம் பதின்பருவத்தில் கோலடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதான கிலியான் மாப்பே. 1958 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேஸிலின் பீலே தனது 17-ஆவது வயதில் கோலடித்தபோது, இறுதி ஆட்டத்தில் பதின்பருவ வயதில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்திருக்கும் மாப்பே, அடுத்த 10 ஆண்டுகள் உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ்வார். ஐரோப்பாவில் நடைபெறக்கூடிய கால்பந்து லீக் போட்டிகளில் மாபேவை ஏலம் எடுக்க ஏராளமான அணிகள் போட்டி போடும். அதனால் அவர் இதுவரை யாருமே வாங்கப்படாத விலைக்கு ஏலம் போவார் என கால்பந்து உலகம் கணித்திருக்கிறது. மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு கிடைத்திருக்கும் நட்சத்திர அந்தஸ்தை விரைவில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பர் இனத்தில் பிறந்து கடுமையான சோதனையையும், வறுமையையும் தாண்டி வந்திருக்கும் மாபேவுக்கு, இந்த உலகக் கோப்பை வெற்றி திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகின் முன்னணி அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்று வரை முன்னேறி அசத்தியது குரோஷியா. அந்த அணி இறுதிச் சுற்றில் பிரான்ஸிடம் தோற்பதற்கு முன்பு வரை அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருந்தது. ஆர்ஜென்டீனா, டென்மார்க், ரஷியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா அணி. இறுதிச் சுற்றில் பிரான்ஸிடம் வெற்றியை இழந்திருந்தாலும், அந்த அணியினர் போராடியே தோற்றனர்.
இறுதிச் சுற்றின் தொடக்கத்தில் துடிப்புமிக்க பிரான்ஸ் அணியே தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியபோது, குட்டி அணியான குரோஷியா தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 
42 லட்சம் பேரையே கொண்ட குரோஷியாவின் மக்கள்தொகை, தமிழகத்தின் மக்கள்தொகையில் 17-இல் ஒரு பங்குதான். ஆனால் 132 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கக்கூட தகுதி பெற முடியவில்லை என்பது உண்மையிலேயே ஏமாற்றம்தான்!


மாப்பேவின்மனிதநேயம்

 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனக்கு கிடைத்த வருவாய் முழுவதையும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்குகிறார் பிரான்ஸ் கால்பந்து நட்சத்திர வீரர் கிலியான் மாப்பே.
பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் 19 வயது வீரர் மாப்பே. மேலும் போட்டியின் சிறந்த இளம் வீரர் என்ற சிறப்பு விருதையும் வென்றார். 
மாப்பே தான் விளையாடிய 7 ஆட்டங்களுக்காக தனக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.10.5 கோடி முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார். 

கால்பந்துமைதானத்தில் அத்துமீறியவர்களுக்கு சிறை
மாஸ்கோவில் பிரான்ஸ்-குரோஷியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தின் போது காவலர்கள் சீருடையில் அதிபர் புதின் எதிர்ப்பாளர்கள் 4 பேர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து போட்டியை தடுக்க முயன்றனர். பின்னர் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் வெரோனிகா, ஓல்கா குரசெவா, பக்ட்சோவா, வெர்ஸிலோவ் உள்ளிட்ட 4 பேருக்கு 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பிரான்ஸில் மகளிர் சீனியர் உலகக் கோப்பை கால்பந்து
உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து சாம்பியன்பட்டத்தை பிரான்ஸ் வென்றுள்ள நிலையில் அந்நாட்டில் மகளிர் சீனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2019-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளன. மகளிர் கால்பந்து மேம்பாட்டுக்கு பிஃபா மிகுந்த ஊக்கம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிஃபா முதல் பெண் பொதுச் செயலாளராக பாத்மா சமோராவை அதன் தலைவர் இன்பேன்டினோ நியமித்தார். மகளிர் கால்பந்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. புதிய மகளிர் உலக கால்பந்து லீக் போட்டிகள் தொடங்கப்படும். மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் என்ற நிலையில் அதற்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றார்.

ஆஸி. நட்சத்திர வீரர் டிம் காஹில் ஓய்வு


ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் காஹில் சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அவர் 107 ஆட்டங்களில் தேசிய அணிக்காக 50 கோல்களை அடித்த பெருமையைப் பெற்றவர். 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ரஷியாவில் நடந்த உலகக்கோப்பையில் பதிலி வீரராக இருந்த காஹில், பெருவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஆடினார். ஆஸி. அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தேசிய அணிக்காக இடம் பெற்றதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com