நாட்டுக்காக விளையாடி காயம் அடைந்தவருக்கு மரியாதை அளியுங்கள்: ரித்திமன் சாஹா வேண்டுகோள்!

நாட்டுக்காக விளையாடி காயம் அடைந்தவருக்கு மரியாதை அளியுங்கள்: ரித்திமன் சாஹா வேண்டுகோள்!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு சாஹாவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்  விக்கெட் கீப்பர் ரித்திமன் சாஹா. இதன்பிறகு, ஐபிஎல் தொடரில் அவருக்குக் கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து குணமடையாத நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் சாஹா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து சாஹாவின் எதிர்காலம் குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இனிமேல் தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும்தான் அணியில் விக்கெட் கீப்பர்களாக நீடிப்பார்கள், சாஹாவால் இனி மீண்டு வரமுடியாது என்று உருவான கருத்துகளுக்குப் பதில் அளித்துள்ளார் சாஹா. தன்னுடைய ட்விட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

உடல்நலக்குறைவால் சாஹா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். ஒரு மோசமான காலக்கட்டத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இந்தச் சமயத்தில் அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் அவருக்குப் பக்கபலமாக உள்ளார்கள். இந்நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து ஜோதிடம் கூறுபவர்களுக்கு - ஒருவருடைய வருங்காலத்தைக் கணிப்பதை விடவும் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள். நாட்டுக்காக விளையாடி காயம் அடைந்தவருக்கு மரியாதை அளியுங்கள் என்று ட்விட்டரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு சாஹாவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் விரைவில் முடிவெடுக்கவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com