உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி 2018 இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி 2018 இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா?


லண்டனில் உலக மகளிர் ஹாக்கி கோப்பை போட்டிகள் சனிக்கிழமை (ஜூலை 21) தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் இந்தியாவும்-ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தும் சனிக்கிழமை மோதுகின்றன. கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. அதே நேரத்தில் காமன்வெல்த் போட்டியில் சிறிது தடுமாறினாலும். பின்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் 2-ஆம் இடம் வென்றது.
தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், மாற்றப்பட்டு ஆடவர் அணிக்கும், ஆடவர் அணி பயிற்சியாளர் மார்ஜின் மகளிரணி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் ஸ்பெயின் நாட்டில் 5 டெஸ்ட் கொண்ட ஹாக்கி தொடரில் இந்தியா பங்கேற்றது. இதில் 2-2 என தொடரை சமன் செய்தது. பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. 
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்கின்றன. 4 பிரிவுகளில் இடம் பெற்ற அணிகள் விவரம்:
பிரிவு ஏ-சீனா, கொரியா, இத்தாலி, நெதர்லாந்து. பிரிவு பி-இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா, பிரிவு சி-ஆர்ஜென்டீனா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், பிரிவு டி-ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜப்பான், நியூஸிலாந்து.
இந்திய அணி ஜூலை 21 இங்கிலாந்துடனும், 26-இல் அயர்லாந்துடனும், 29-இல் அமெரிக்காவுடனும் மோதுகிறது.
ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், 4-ஆம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், 5-ஆம் தேதி மூன்றாம் இடத்துக்கான ஆட்டம், இறுதி ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி கடந்த 1974 உலகக் கோப்பையில் 4-ஆம் இடம் பெற்றதே இதுவரை அதன் சாதனையாக உள்ளது. இந்திய அணியில் கேப்டன் ராணி ராம்பால், தீபிகா ஆகியோரே உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். அதே நேரத்தில் ஏனைய 16 வீராங்கனைகள் முதன்முறையாக விளையாடுகின்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பெறும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிகள் கிராஸ்ஓவர் ஆட்டங்களில் பங்கேற்று மீதமுள்ள 4 காலிறுதி அணிகளாக தகுதி பெறும். 
காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை தொடக்க சுற்றில் இந்தியா வென்றது. அதே நேரத்தில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் 6-0 என தோல்வியைத் தழுவியது.
மேலும் பி பிரிவில் வலுவான அமெரிக்க அணியும் இடம் பெற்றுள்ளது. ஹாக்கி உலகக் லீக் தொடர், ரியோ ஒலிம்பிக்கில் அந்த அணியுடன் இந்தியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அண்மைக்காலமாக இந்திய மகளிரணியின் ஆட்டத்த்திறனை பார்க்கும் போது உலகில் வலுவான எந்த அணியையும் எதிர்கொண்டு வீழ்த்துவர் என நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்தியா முதல் 4 இடங்களுக்குள் வந்து 44 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய அணி தனது திறமையான ஆட்டத்தை தொடர்ந்தால் பதக்க பட்டியலில் இடம் பெறலாம். 

புதிய விதிகள்
முதன்முறையாக 12 அணிகளில் இருந்து 16 அணிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பச்சை நிற மைதானத்தில் இருந்து புதிதாக நீல நிற மைதானமும், மஞ்சள் நிற பந்தும் பயன்படுத்தப்படுகிறது. 
70 நிமிடங்கள் ஆட்ட நேரம் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு நேரம் தரப்படுகிறது. பெனால்டி ஸ்ட்ரோக் பதிலாக 8 வினாடி பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்படுகிறது. 
அணி விவரம்
கேப்டன் ராணி ராம்பால் அணியின் முக்கிய அனுபவம் வாய்ந்த வீராங்கனையாக உள்ளார். 15 வயதில் தேசிய அணியில் இடம் பெற்ற ராணி 2009-இல் சாம்பியன் சேலஞ்ச் போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சிறப்பைப் பெற்றார். 
2010 ஆர்ஜென்டீனா உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீராங்கனை பட்டம் வென்றார். சிறந்த பார்வர்டான இவரது தலைமையில் ஆசியக்கோப்பையை இந்தியா வென்றது. இந்திய அணிக்காக 213 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கோல்கீப்பர் சவீதா 
துணை கேப்டனான சவீதா உலகின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக திகழ்கிறார். 27 வயதான இவர் ஆசிய மகளிர் சாம்பியன் பட்டம், ஆசிய கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர். எதிரணியின் கோல் முயற்சிகளை சவீதா தடுத்ததாலேயே கடந்த ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் பட்டத்தை இந்தியா வென்றது.

கோல்கீப்பர்கள் 
சவீதா, ரஜனி எட்டிமர்பு, தற்காப்பு வீராங்கனைகள்; சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கெளர், ரீனா கோக்கர், மிட்பில்டர்கள்: நமீதா டோப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கெளர், நிக்கி பிரதான், பார்வர்ட்கள்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்நீத்கெளர், லால்ரேமிசியாமி, உதிதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com