சாஹாவின் உடல்நிலை நிலவரம் குறித்த சர்ச்சை: அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணம் காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
சாஹாவின் உடல்நிலை நிலவரம் குறித்த சர்ச்சை: அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணம் காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்  விக்கெட் கீப்பர் ரித்திமன் சாஹா. இதன்பிறகு, ஐபிஎல் தொடரில் அவருக்குக் கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து குணமடையாத நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றார். இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் சாஹா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதுதான் சாஹாவுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவர் இந்நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று என்சிஏ அமைப்பின் மீது விமரிசனங்கள் எழுந்தன. இதையடுத்து சாஹாவின் உடல்நிலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதன் விவரம்:

தென் ஆப்பிரிக்காவில் சாஹாவுக்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டது. இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு ஊசி செலுத்தப்பட்டு, என்சிஏ-வில் சிகிச்சைகளும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு மார்ச் 19 அன்று முழுவதும் குணமாகி என்சிஏவிலிருந்து விடைபெற்றார். 

ஆனால் ஐபிஎல்-லில் விளையாடியபோது காயம் அடைந்துள்ளார் சாஹா. மே 7 அன்று தோள்பட்டையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வலி நிவாரண ஊசி அவருக்குச் செலுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அந்தக் காயம் குணமாகியுள்ளது. இதனால் ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் ஓய்வு எடுத்துக்கொண்ட சாஹா, ஐபிஎல்-லின் கடைசிக்கட்ட ஆட்டங்களில் விளையாடினார். சாஹாவின் தோள்பட்டைக் காயம் குறித்த ஆய்வுக்காக என்சிஏவுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, தோள்பட்டையின் நிலை பிப்ரவரியில் இருந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல மீண்டும் தொடர்வதாக என்சிஏ மருத்துவர் கூறியதால் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார் சாஹா. ஆனால் மே 25 அன்று விளையாடிய ஐபிஎல் போட்டியில் கை விரலில் சாஹாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் சஹா. மருத்துவர்களின் ஆலோசனைப்படி கை விரலுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது. அப்போது தோள்பட்டையில் அவருக்கு எந்த வலியும் இல்லை. 

ஜூலை 3 அன்று, சாஹா, கை விரல் காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் தோள்பட்டையில் மீண்டும் உண்டான வலியால் அவதிப்பட்டுள்ளார். வலது தோள்பட்டைக் காயம் குறித்து என்சிஏவில் அவர் தெரிவித்துள்ளார்.  அப்போது எடுத்த எம்ஆர்ஐ ஸ்கேனில் நிலைமை மோசமானது தெரியவந்துள்ளது. ஜூலை 6 அன்று அவருக்கு ஊசி செலுத்தப்பட்டு, அதனால் வலி குறையாவிட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து சாஹா விலகியுள்ளார். ஊசி செலுத்தியபிறகும் நிலைமை சீராகாததால் ஜூலை 13 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை இறுதியிலோ ஆகஸ்ட் ஆரம்பத்திலோ சாஹாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com