‘கிரிக்கெட் ரசிகர்’ கருணாநிதியை நெகிழ வைத்த சச்சினின் கண்ணீர் உரை! 

கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த போதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கத்துடன்...
‘கிரிக்கெட் ரசிகர்’ கருணாநிதியை நெகிழ வைத்த சச்சினின் கண்ணீர் உரை! 

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. சேப்பாக்கம் மைதானத்துக்குப் பலமுறை நேரில் வந்து ஆட்டங்களை ரசித்துள்ளார்.

சச்சினின் கிரிக்கெட் ஆட்டங்களை ரசித்து பார்த்துள்ள கருணாநிதி, சச்சின் 2013-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது அவரைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் கூறியதாவது:

கிரிக்கெட்டில் மிகவும் அபாரமாக விளையாடி நினைவில் வைக்கத்தக்க சாதனைகளைப் படைத்து, இந்தியாவில் யாரும் செய்ய முடியாத வகையில் பெருமை சேர்த்த பிறகுதான் நீங்கள் ஓய்வு பெற்றுள்ளீர்கள். உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டீர்கள். இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். முறியடிக்க முடியாத மற்றும் மறக்க இயலாத சாதனைகள் மூலம் நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மகுடம் சூட்டியுள்ளீர்கள். 

கிரிக்கெட்டில் தனது திறமையை முழுவதையும் வெளிப்படுத்தியவர் என்று கவாஸ்கர் உங்களை சரியான முறையில் விவரித்துள்ளார். கிரிக்கெட்டின் அனைத்து நிலையிலும் சச்சின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்றும், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் இந்த தலைமுறையின் சிறந்த வீரர் என்றும் உங்களை அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. புகழின் உச்சத்தை அடைந்த பிறகு பிரியா விடை பெற்றீர்கள். பிரிவுபச்சாரத்தில் உங்களது கண்ணீர் உரை நெகிழ வைத்தது. உங்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. நீங்கள் நீண்ட காலம், உடல் ஆரோக்கியத்துடனும் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி தெரிவித்தார். 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கரின் உருவம் பொறித்த ஓவியத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்களின் கையெழுத்து பெற்று மும்பையில் நடைபெறும் ஏலத்தில் இப்படத்தினை விற்று கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்தார்கள். அறிவாலயத்தில் சச்சின் உருவம் பொறித்த ஓவியத்தில் கருணாநிதி கையெழுத்திட்டார். 

2014-ம் ஆண்டு வெளியான சச்சினின் சுயசரிதையான பிளேயிங் இட் மை வே நூலுக்கு, கருணாநிதி பாராட்டு தெரிவித்து பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர், அண்மையில் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதை நூலான  ‘பிளேயிங் இட் மை வே கிடைக்கப்பெற்றேன். கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த போதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கத்துடன் அவர் பதிலளிக்கும் பாங்கும் அந்தப் பண்பாடும்கூட, அவர் பெரும் புகழ்பெறக் காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல, எந்நாளிலும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சச்சினின் சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படித்து வருகிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com