ஐபிஎல் இறுதிச்சுற்றில் அணியின் ஆலோசனைக் கூட்டம் 5 நொடிகள் மட்டுமே நீடித்தது: ஆச்சர்யமூட்டும் தோனி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிச்சுற்றின்போது அணியின் ஆலோசனைக் கூட்டம் ஐந்து நொடிகள் மட்டுமே நீடித்தன என்று...
ஐபிஎல் இறுதிச்சுற்றில் அணியின் ஆலோசனைக் கூட்டம் 5 நொடிகள் மட்டுமே நீடித்தது: ஆச்சர்யமூட்டும் தோனி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிச்சுற்றின்போது அணியின் ஆலோசனைக் கூட்டம் ஐந்து நொடிகள் மட்டுமே நீடித்தன என்று கூறியுள்ளார் தோனி.

ஒரு விழாவில் கலந்துகொண்ட தோனி, ஐபிஎல் இறுதிச்சுற்றின்போது அணியின் உத்திகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி ஆச்சர்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

இறுதிச்சுற்றின்போது நாங்கள் பரபரப்பின்றி இருந்தோம். எல்லோருக்கும் அவரவர் பொறுப்பு என்ன என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. எனவே தேவைப்பட்டால் மட்டுமே சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டும். அணியில் கேப்டனும் பயிற்சியாளருமே இருப்பதாலேயே ஏதாவது சொல்ல வேண்டும் என்பதில்லை. இறுதிச்சுற்றின்போது அணியின் ஆலோசனைக் கூட்டம் 5 நொடிகள் மட்டுமே நீடித்தது. களத்தில் இறங்கி, கோப்பையை வெல்லுங்கள் வீரர்களே என்றுதான் ஃபிளெமிங் பேசினார். கூட்டம் முடிந்தது.

எங்கள் அணியின் வெற்றியின் ரகசியம் இதுதான் என நினைக்கிறேன். மிகப்பெரிய கூட்டங்கள் எங்கள் அணியில் நடக்காது. ஒவ்வொருவரும் பல வருடங்களாக ஒன்றாக விளையாடுபவர்கள். ஆட்டத்தின் சூழல் உங்களுக்கு நன்குத் தெரியும். களத்தில் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியும். வெற்றிக்கான திட்டம் என்பது புதிரான ஒன்று அல்ல. 

பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களுக்கெனத் தனித்தனியே கூட்டம் நடத்தப்படும்தான். பேட்ஸ்மேன்களுக்கான கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன். பல சமயங்களில் மக்கள் இதுபோன்ற கூட்டங்கள் கலந்து கொள்வார்கள், தங்களுடைய வருகையைப் பதிவு செய்ய. 

சிஎஸ்கே அணியில் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பந்துவீச்சுப் பயிற்சியாளர்கள் சிஎஸ்கே அணி உரிமையாளர்களிடம் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. 

அணி வீரர்களால் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் ஆலோசனையாகச் சொல்ல வேண்டும். திடீரென பந்துவீச்சாளரிடம் சென்று, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் யார்க்கர் பந்துவீசச் சொல்லமுடியாது. அவர் தன் வாழ்க்கையில் அதை முயற்சி செய்திருக்கவே மாட்டார். அவர்களுடைய பலத்துக்கு ஏற்றாற்போல் பேசவேண்டும். அவர்களுடைய பலவீனங்களை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் நாங்களில் மிகவும் அற்புதமான பணிகளைச் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com