இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: பெங்களூரில் நாளை தொடங்குகிறது!

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூரில் நாளை நடைபெறவுள்ளது... 
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: பெங்களூரில் நாளை தொடங்குகிறது!

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூரில் நாளை நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் ஜுன் மாதம் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் நடந்ததில்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளன. இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான். 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்தது.

காயம் காரணமாக கோலி ஆடாத நிலையில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட்டில் விளையாடுவது சிறப்பானது என இந்திய அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஆப்கன் வீரர்களுக்கு வரலாற்று சிறப்பானது. அதே நேரத்தில் அதில் இந்திய அணியும் பங்கேற்பது சிறப்பானதாகும். அவர்கள் சிறந்த அணியாகவும், நல்ல வீரர்களையும் கொண்டுள்ளனர். குறுகிய ஓவர்கள் போட்டிகளில் அவர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரில் இன்று இந்திய அணி வீரர்களுக்கு நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாததால் முகமது ஷமிக்குப் பதிலாக தில்லியைச் சேர்ந்த 25 வயது நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com