பரபரப்பான ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

ஒருகட்டத்தில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது...
பரபரப்பான ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம் பகலிரவாக லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீர்மானித்தது.

தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 19 ரன்கள் எடுக்க, உடன் வந்த டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 24, பின்னர் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் டிம் பெய்ன் 12 ரன்கள் எடுக்க, அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் விளாசினார்.

அடுத்து வந்தவர்களில் ஆஷ்டோன் அகர் மட்டும் 40 ரன்கள் சேர்க்க, மிட்செல் நேசர் 6, கேன் ரிச்சர்ட்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக ஆன்ட்ரூ டை 19 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, லியாம் பிளங்கெட் தலா 3 விக்கெட்டுகளும், ஆதில் ரஷீத் 2, மார்க் வுட், டேவிட் வில்லே தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 215 ரன்கள் இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, முதல் மூன்று விக்கெட்டுகளை 38 ரன்களில் இழந்தது. பிறகு மார்கனும் ரூட்டும் சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். எனினும் மீண்டும் கடகடவென விக்கெட்டுகளை இழந்து ஒருகட்டத்தில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லேவும் பிளங்கெட்டும் பொறுப்புடன் விளையாடி அணியைக் கரை சேர்த்தார்கள். வில்லே 41 பந்துகளில் 35 ரன்களும் பிளங்கெட் 3 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com