இரண்டே நாள்களில் முடிந்த பெங்களூர் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பெங்களூர் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது...
இரண்டே நாள்களில் முடிந்த பெங்களூர் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பெங்களூர் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களுருவில் நேற்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் நாளன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 347 ரன்களைக் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன் (107), முரளி விஜய் (105) ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஹர்திக் பாண்டியா 10, அஸ்வின் 7 ரன்களுடன் துவக்க நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அஸ்வின் 18 ரன்களில் அஹ்மத்ஸாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்தபிறகு ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களில் மிகவும் பொறுப்புடன் விளையாடிய பாண்டியா 83 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு அவரும் 10 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து வஃபாதார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 400 ரன்கள் தாண்டுவதற்கு பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ், வஃபாதார் வீசிய 102-வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க, இஷாந்த் சர்மா கூடுதலாக 1 பவுண்டரி அடித்து அந்த ஓவரில் மொத்தமாக 21 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசியில் இஷாந்த் சர்மா, ரஷித் கான் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ், 21 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் யாமின் அஹ்மத்ஸாய் 3 விக்கெடுட்டுகளும் வஃபாதார், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள், இந்திய வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். முகமது ஷஸாத் 14 ரன்களில் பாண்டியாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ஆட்டமிழந்தார். ஜாவத் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ரஹ்மத் ஷா 14 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அஃப்சார் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் பந்தில் போல்ட் ஆனார். இதனால் 35 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது ஆப்கானிஸ்தான். 

இதற்குப் பிறகு பின்வரிசை வீரர்கள் பக்குவமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சு ஆப்கானிஸ்தானை மேலும் தடுமாற வைத்தது. கேப்டன் அஸ்கார், அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அவர் 11 ரன்கள் எடுத்தார். அதே 11 ரன்களில் ஹஷ்மதுல்லா அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரஷித் கான் உள்ளே நுழைந்தபோது அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 7 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஹ்மத்ஸாய் டக் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். 44 பந்துகள் வரை தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்த முகமது நபி, அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். கடைசியாக முஜீபின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி, 27.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் முன்னிலை பெற்றது. 

கடினமான சூழலில் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணியால் இந்தமுறையும் இந்தியப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் போனது. முதல் நான்கு விக்கெட்டுகளில் மூன்று உமேஷ் யாதவுக்கும் ஒரு விக்கெட் இஷாந்த் சர்மாவுக்கும் கிடைத்தன. இதையடுத்து சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள். முதல் இன்னிங்ஸில் அஸ்வின் பிரமாதமாக வீச, இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா அசத்தினார். ஹஸ்மதுல்லா மட்டும் சிறப்பாக விளையாடி 88 பந்துகள் தாக்குப்பிடித்து 36 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஆஷ்கர் ஸ்டானிக்ஸாய் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். 

இறுதியில் தனது 2-வது இன்னிங்ஸில் 38.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் டெஸ்டை இரண்டே நாள்களில் வென்றது. 9 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. உமேஷ் யாதவ் 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் எடுத்தார். 

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அதிரடி சதம் அடித்த ஷிகர் தவனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com