ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
கோலை தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஜெர்மனி கோல் கீப்பர்.
கோலை தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஜெர்மனி கோல் கீப்பர்.

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்புச் சாம்பியன் ஜெர்மனிக்கும், அனுபவம் வாய்ந்த மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
4 முறை சாம்பியனான ஜெர்மனி தற்போது 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்ட வலுவான அணியை களமிறக்கி உள்ளது. அதே நேரத்தில் மெக்ஸிகோ அணி ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டதாக விளங்குகிறது. உலகக் கோப்பையில் மூன்று முறை ஜெர்மனியுடன் மோதியுளள மெக்ஸிகோ அனைத்திலும் தோல்வியே அடைந்தது.
துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆட்டத்தை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்ல தீவிரமாக முயற்சித்தனர். இரு தரப்பினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டபோதும் கோலடிக்க முடியவில்லை. 35-வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் ஹிர்விங் லொசான்úஸா ஜெர்மனியின் தடுப்பு அரணையும் மீறி முதல் கோலை அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெர்மன் வீரர்கள் தீவிரமாக கோலடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்ட முடிவில் மெக்ஸிகோ 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி அணி வசமே பெரும்பாலும் பந்து இருந்ததால் அடிக்கடி மெக்ஸிகோவின் தற்காப்பு அரணை ஊடுருவிச் சென்றனர். எனினும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி வரை ஜெர்மனி வீரர்கள் சாரை சாரையாக சென்று மெக்ஸிகோ கோல்பகுதியை முற்றுகையிட்டனர்.
இறுதியில் மெக்ஸிகோ 1-0 என நடப்புச் சாம்பியன் ஜெர்மனியை முதன்முறையாக வீழ்த்தியது. டோனி குரூஸ், மெசுட் ஓஸில், நியுர், கிம்மிச், ஹம்மல்ஸ், முல்லர், டிராக்ஸ்லர், வெர்னர் என பல நட்சத்திர வீரர்கள் கொண்ட ஜெர்மனியின் தோல்வி மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா

உலகக் கோப்பை போட்டியைக் காண வந்த ஜாம்பவான் மாரடோனா தடையை மீறி புகைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆர்ஜென்டீனா அணியின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, சனிக்கிழமை இரவு ஸ்பார்டக் மைதானத்தில் ஐஸ்லாந்து-ஆர்ஜென்டீனா இடையே நடந்த போட்டியைக் காண வந்திருந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் 12 மைதானங்களிலும் சிகரெட் பிடிப்பது, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த மாரடோனா தடையை மீறி புகைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
இது தொடர்பாக பிஃபா நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மாரடோனா, ஏற்கெனவே கடந்த 1986-இல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கையால் கோலை தள்ளிவிட்டார். பின்னர் அதுகுறித்து கேட்ட போது கடவுளின் கை அது எனக்கூறினார். மேலும் போதை மருந்து பழக்கம் தொடர்பாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும் ஆசிய ரசிகர் ஒருவரிடம் இனரீதியில் அவமானப்படுத்தும் வகையில் நடந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளித்த மாரடோனா, ஆசிய ரசிகர் ஒருவர் ஆர்ஜென்டீனா அணி சீருடையை அணிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போதைய சூழலில் எதையாவது செய்தியாக்க வேண்டும் என சிலர் தேடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் தனது முகநூல் பக்கத்தில் புகைபிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் மாரடோனா.

செர்பியா அபாரம்

கோஸ்டா ரிகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா வீழ்த்தியது.
குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள கோஸ்டா ரிகா மற்றும் செர்பிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றது.
கடந்த 2014 உலகக் கோப்பை போட்டியில் கோஸ்டா ரிகா அணி காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் நெதர்லாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் செர்பியா ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டியில் தனது பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றிருந்தது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் பெரிய அளவிலான போட்டிக்கு செர்பியா தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே செர்பிய அணியின் தீவிர தாக்குதல் ஆட்டத்தால் முதல் கார்னரை பெற்றது. எனினும் கோலடிக்க முடியவில்லை. 25 நிமிடங்கள் கழிந்த நிலையில் செர்பியா ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் டேவிட் கிஸ்மன் செய்த பவுலால் செர்பியாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் அலெக்சாண்டர் கொலோரவ் 25 அடி தூரத்தில் இருந்து சிறப்பாக பயன்படுத்தி கோலடித்தார். இதனால் 1-0 என செர்பியா முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி பகுதியில் கோஸ்டா ரிகா வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும், கோலடிக்க முடியவில்லை. இறுதியில் செர்பியா வெற்றி பெற்று 3 புள்ளிகளை தன் வசமாக்கிக் கொண்டது.
குரூப் இ பிரிவில் பிரேஸில், சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் செர்பியாவின் வெற்றி அதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com