பேரழிவுக்கான மிகச்சரியான செயல்முறை: சச்சின் டெண்டுல்கர் கோபம்!

ஒவ்வொரு பந்தும் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கான தகுந்த கால அளவு வழங்கப்படுவதில்லை...
பேரழிவுக்கான மிகச்சரியான செயல்முறை: சச்சின் டெண்டுல்கர் கோபம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியையும் வென்று ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 

நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஆரோன் ஃபிஞ்சும் மார்ஷும் சதமடித்தார்கள். ஃபிஞ்ச் 100, மார்ஷ் 101 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஹெட் 63 ரன்கள் எடுத்தார். இப்படி முதல் மூன்று வீரர்கள் அருமையாக ஆடியதால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்தின் வில்லே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆனால், இந்த இலக்கை மிக எளிதாக எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர் ராய் 83 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். பேர்ஸ்டோவ் 79 ரன்களும் பட்லர் 29 பந்துகளில் 54 ரன்களும் எடுத்ததால் இங்கிலாந்து அணி, 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து அபார வெற்றி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. 

இதுபோல 300 ரன்களை எளிதாகத் தாண்டுவது சச்சின் டெண்டுல்கரைக் கோபப்பட வைத்துள்ளது. ஆட்டம் முடிந்தபிறகு சச்சின் ட்வீட் செய்ததாவது:

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இரு புதிய பந்துகள் வழங்கப்படுவது பேரழிவுக்கான மிகச்சரியான செயல்முறை. இதனால் ஒவ்வொரு பந்தும் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கான தகுந்த கால அளவு வழங்கப்படுவதில்லை. கடைசி ஓவர்களில் வீசப்படும் ரிவர்ஸ் ஸ்விங் வகைப் பந்துகளைச் சமீபகாலமாக நம்மால் பார்க்க முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

சச்சினின் இந்த ஆதங்கத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸூம் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிரடியான வேகப்பந்துவீச்சாளர்களை நான் ஏன் உருவாக்குவதில்லை என்பதற்கு இதுவே காரணம். அனைவரும் தற்காப்புப் பந்துவீச்சில் கவனம் செலுத்துகிறார்கள். ரிவர்ஸ் ஸ்விங் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com