குரோஷியாவிடம் (3-0) ஆர்ஜென்டீனா படுதோல்வி: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுமா?

குரோஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது ஜாம்பவான் ஆர்ஜென்டீனா.
குரோஷியாவிடம் (3-0) ஆர்ஜென்டீனா படுதோல்வி: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுமா?

குரோஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது ஜாம்பவான் ஆர்ஜென்டீனா.
உலகக் கோப்பை 2018-இல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. 
இந்நிலையில் நோவாகிராட் நிஷ்னி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான குரூப் டி பிரிவு ஆட்டம் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் தீவிர தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. எனினும் ஆர்ஜென்டீனாவின் நட்சத்தில வீரர் மெஸ்ஸியை குரோஷியா தற்காப்பு ஆட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அவரால் கோலடிக்க முடியவில்லை.
முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கியது. 53-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மெர்கடோ கடத்தி தந்த பந்தை முன்கள ஆட்டக்காரர் அன்டே ரெபிக் பேக்வாலி முறையில் அற்புதமாக கோலாக மாற்றினார். 
மெஸ்ஸியின் ஆட்டத்துக்கு குரோஷிய வீரர்கள் முட்டுக்கட்டை போட்ட நிலையில் அவரால் 64-வது நிமிடத்தில் தான் கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட முடிந்தது. இதற்கிடையே ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பிராúஸாவிக் அனுப்பிய பந்தை, கேப்டன் லுகா மொட்ரிக் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தில் குரோஷியாவின் கை மேலோங்கியது. ஆர்ஜென்டீனா வீரர்கள் நிலைகுலைந்தனர்.

மெஸ்ஸி ஓய்வு பெற வாய்ப்பு?
ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகிறது.
உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவோடு வந்த மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா அணி துவக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. மெஸ்ஸி அந்த ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பையும் தவறவிட்டார்.
குரோஷியாவோடு நடந்த ஆட்டத்தில் 3-0 என படுதோல்வி அடைந்தது. மேலும் மெஸ்ஸியின் ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. கடந்த 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா தற்போது துவக்க ஆட்டங்களிலேயே தடுமாறி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா எனத் தெரியவில்லை. தனது அணி சோபிக்கத் தவறியதால், இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெற மெஸ்ஸி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2016-இல் ஏற்கெனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அவர் பின்னர் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

நாக் அவுட் சுற்றில் குரோஷியா
ஆட்ட நேரம் முடிந்து கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தின் போது, குரோஷிய வீரர் இவான் ரகிடிக் அடித்த பந்தை ஆர்ஜென்டீனா கோல்கீப்பர் தடுத்து திருப்பி அனுப்பினார். அதை மற்றொரு வீரர் கொவாசிக் மீண்டும் கடத்தி, ரகிடிக்கிடம் அனுப்ப அவர் அதை அற்புதமாக கோலாக்கினார். இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் குரோஷியா முதலிடம் பெற்றது.
ஐஸ்லாந்துடன் டிரா, குரோஷியாவுடன் தோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா வெறும் 1 புள்ளியோடு உள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி முன்னேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நைஜீரியாவுடன் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ஐஸ்லாந்து-நைஜீரியா அணிகள் மோதும் ஆட்டம் டிராவில் முடிய வேண்டும். அப்போது நாக் அவுட் சுற்றுக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com