தென் கொரியாவை வீழ்த்திய மெக்ஸிகோ

ரோஸ்டோவ்-ஆன்-டான், ஜூன் 23: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் "எஃப்' பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை
தென் கொரியாவை வீழ்த்திய மெக்ஸிகோ

ரோஸ்டோவ்-ஆன்-டான், ஜூன் 23: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் "எஃப்' பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன்மூலமாக நாக் அவுட் சுற்றை நோக்கி அந்த அணி மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது.
 ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெக்ஸிகோ அணியின் சார்பில் கார்லோஸ் வெலா, ஜாவியர் ஹெர்னான்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, தென் கொரியா சார்பில் சன் ஹியுங்மின் கோலடித்தார்.
 முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்திய மெக்ஸிகோ, இந்த ஆட்டத்திலும் ஆக்ரோஷமாகவே ஆடியது. ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைக் கையாண்ட கார்லோஸ் வெலா அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.
 தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு கோல் வாய்ப்புகள் கிடைக்காததால், முதல் பாதி நிறைவில் மெக்ஸிகோ 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியிலும் அந்த அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜாவியர் ஹெர்னான்டஸ் கோலடித்தார்.
 இதனால் மெக்ஸிகோ 2-0 என முன்னிலை பெற்றது. அந்த அணியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் தென் கொரியா தனது கோல் கணக்கை தொடங்க கடுமையாகப் போராடி வந்தது. அதன் பலனாக 90 நிமிடங்களுக்குப் பிறகான கூடுதல் நேரத்தில் அந்த அணியின் சன் ஹியுங்மின் கோலடித்தார்.
 எனினும், இறுதியில் மெக்ஸிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com