5-0. தொடரும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் சோகம்!

கடந்த 18 ஒருநாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 16 ஆட்டங்களில் தோற்று...
5-0. தொடரும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் சோகம்!

5-0.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி எக்காலத்திலும் இப்படியொரு மோசமான தோல்வியை அடையும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அதுவும் ஒருவருடத்தில் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

மான்செஸ்டரில் நடைபெற்ற 5-வது ஒருநாள் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 5-0 என வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஃபிஞ்சும் ஹெட்டும் விரைவாக ரன்கள் குவித்தார்கள். 17 பந்துகளில் 22 ரன்களில் ஃபிஞ்சும் 42 பந்துகளில் 56 ரன்களில் ஹெட்டும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேரே, ஷார்ட் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் ஆஸ்திரேலிய அணி, 34.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொயீன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குச் சமமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினார்கள். 114 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றது இங்கிலாந்து அணி. இதன்பிறகு ரஷித்தின் துணையுடன் அற்புதமாக ஆடினார் பட்லர். அட்டகாசமான சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இறுதியில் மிகவும் பரபரப்பான முறையில் 48.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பட்லர் 122 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பட்லர் அள்ளிச் சென்றார். 

* இதுவரை எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை 5-0 என இங்கிலாந்து அணி வென்றதில்லை. இதுவே முதல்முறை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என வென்றது இங்கிலாந்து அணி. அதற்கு முன்பு இந்தியாவிடமும் 1-4 எனத் தோற்றது ஆஸ்திரேலியா. 

* கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 5-0 என எந்தத் தொடரிலும் ஆஸ்திரேலியா தோற்றதில்லை. அதாவது 1984 முதல் 2016 வரை) ஆனால், 2016 செப்டம்பரில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்க அணி 5-0 எனத் தோற்கடித்தது. இப்போது மீண்டும் அதேபோன்றதொரு தோல்வி!

* கடந்த 18 ஒருநாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 16 ஆட்டங்களில் தோற்று 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com