தோனியை விடவும் இவரே உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்: ஆஸி. கேப்டன் பாராட்டு!

இவருக்குச் சவால் அளிக்க எத்தனை பேர் வருவார்கள் எனத் தெரியவில்லை... 
தோனியை விடவும் இவரே உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்: ஆஸி. கேப்டன் பாராட்டு!

மான்செஸ்டரில் நடைபெற்ற 5-வது ஒருநாள் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 5-0 என வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஃபிஞ்சும் ஹெட்டும் விரைவாக ரன்கள் குவித்தார்கள். 17 பந்துகளில் 22 ரன்களில் ஃபிஞ்சும் 42 பந்துகளில் 56 ரன்களில் ஹெட்டும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேரே, ஷார்ட் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் ஆஸ்திரேலிய அணி, 34.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொயீன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குச் சமமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினார்கள். 114 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றது இங்கிலாந்து அணி. இதன்பிறகு ரஷித்தின் துணையுடன் அற்புதமாக ஆடினார் பட்லர். அட்டகாசமான சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இறுதியில் மிகவும் பரபரப்பான முறையில் 48.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பட்லர் 122 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பட்லர் அள்ளிச் சென்றார். 

பட்லரின் இன்னிங்ஸ் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் கூறியதாவது: 

பட்லர் மிகச்சிறப்பாக விளையாடுகிறார். இப்போது, உலகின் மிகச்சிறந்த ஒருநாள், டி20 விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இவராகத்தான் இருக்கவேண்டும். இவருக்குச் சவால் அளிக்க எத்தனை பேர் வருவார்கள் எனத் தெரியவில்லை. எம்.எஸ். தோனியும் சிறப்பாகச் செய்கிறார். ஆனால் தற்சமயத்தில் திறமையின் உச்சத்தில் உள்ளார் பட்லர். அவருடைய ஒருநாள் கிரிக்கெட்டை நன்குப் புரிந்துவைத்துக் கொண்டுள்ளார். தன்னுடைய பலங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு விளையாடுகிறார் என்று பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com