டோனி குரூஸ் கோலால் நடப்பு சாம்பியன் ஜெர்மனி தலை தப்பியது

ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அதிர்ஷ்டவசமாக இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 
டோனி குரூஸ் கோலால் நடப்பு சாம்பியன் ஜெர்மனி தலை தப்பியது

ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அதிர்ஷ்டவசமாக இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 
குரூப் எஃப் பிரிவைச் சேர்ந்த ஸ்வீடன்-ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்றது. பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட ஜெர்மனி, இதே பிரிவைச் சேர்ந்த மெக்ஸிகோவுடன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என கேள்விக் குறி எழுந்த நிலையில் ஸ்வீடனுடன் மோதியது. இரு அணிகளும் 11 முறை மோதியதில் ஜெர்மனியே அனைத்திலும் வென்றுள்ளது.
இந்நிலையில் ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மன் முன்கள வீரர்கள் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஈடுகொடுத்து ஸ்வீடன் வீரர்களும் ஜெர்மன் தற்காப்பு அரணை அடிக்கடி தகர்த்து ஊடுருவினர்.
ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் கிளாஸன் கடத்தி அனுப்பிய பந்தை ஓலா டொய்வோனென் அற்புதமாக கோலாக்கினார். முதல் பாதி ஆட்ட நிறைவில் ஸ்வீடன் 1-0 என முன்னிலை பெற்றது.
வாழ்வா-சாவா ஆட்டம் என்பதால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 48-வது நிமிடத்தில் அந்த அணியின் கோமஸ் அனுப்பிய பந்தை மார்கோ ரியுஸ் கோலாக்கினார். இதையடுத்து 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இரு அணி வீரர்களும் வெற்றிக்கான கோலை அடிக்க கடுமையாக போராடினர். மார்கோ ரியுஸ் கடத்தித் தந்த பந்தை ஆட்டம் முடிய சில விநாடிகள் இருக்கையில் டோனி குரூஸ் கோலாக்கி தனது அணி வெல்ல உதவினார். இதன் மூலம் ஜெர்மனி 2-1 என வெற்றி பெற்றது.
குரூப் எப் பிரிவில் மெக்ஸிகோ 6 புள்ளிகளுடன் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அதே நேரத்தில் ஜெர்மனி-ஸ்வீடன் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஜெர்மனி-தென்கொரியா, ஸ்வீடன்-மெக்ஸிகோ ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து எந்தஅணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எனத் தெரியவரும்.
ஸ்வீடனை 2-1 என வீழ்த்தியதையடுத்து ஜெர்மனி ரசிகர்கள் நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மன் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற நிலையில் இருந்த நடப்பு சாம்பியன் ஜெர்மனி டோனி குரூஸின் கடைசி நிமிட கோலால் ஸ்வீடனை வென்றது. இதனால் ஜெர்மனியின் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெர்லின் நகரில் பிரான்டர்பர்க் கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஆட்ட முடிவை பார்த்தவுடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். கொட்டும் மழையிலும் ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடினர்.

உருகுவே வீரர் ஜிமென்ஸ் காயம்
உருகுவே அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜோஸ் மரியா ஜிமென்ஸ் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷியாவுடன் நடக்க உள்ள முக்கிய ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் ரஷியாவும், உருகுவேயும் தலா 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனினும் பிரிவில் யார் முதலிடம் என்பதற்கான முக்கிய ஆட்டம் சமாராவில் திங்கள்கிழமை நடக்கிறது. கடந்த போட்டியில் உருகுவே வெற்றிக் கோலை ஜிமென்ஸ் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்வீடன் பயிற்சியாளர் கோபம்
ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி குரூஸ் அடித்த கடைசி நிமிட கோலால் 2-1 என ஜெர்மனி வெற்றி பெற்றது. குரூப் எப் பிரிவில் இதன் மூலம் ஜெர்மனியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இதை ஜெர்மனி வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 90 நிமிட நேரம் நாங்கள் போராடினோம். இறுதி விசில் ஊதப்பட்டால் எதிரணி வீரர்களுடன் கைகளை குலுக்கிச் செல்வோம். ஆனால் ஜெர்மனி வீரர்கள் எங்கள் அருகே வந்து கொண்டாடியது, எங்கள் முகத்திலேயே தேய்த்தது போல் இருந்தது என பயிற்சியாளர் ஜேன் ஆண்டர்சன் கொதிப்புடன் கூறினார்.

ஜப்பான் ரசிகர்களுக்கு பாராட்டு
ஜப்பான் அணி உலகக்கோப்பையில் பட்டம் வெல்கிறதோ இல்லையோ அந்த நாட்டு ரசிகர்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர். உலகக் கோப்பை போட்டியில் பொதுவாக இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். ஆனால் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வென்ற நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் ஆட்டம் முடிந்தவுடன்,தங்கள் பகுதியில் இருந்த குப்பைகள், கழிவுகளை தாங்களே சுத்தம் செய்து தொட்டியில் போட்டுச் சென்றனர். இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. இதைப் பார்த்த கொலம்பியா ரசிகர்களும் தங்கள் பகுதியில் இருந்த குப்பைகளை தாங்களே அகற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com