ஒரு பில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள்: மார்தட்டும் ஐசிசி!

கிரிக்கெட் விளையாட்டில் முதன்முறையாக சர்வதேச அளவிலான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
ஒரு பில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள்: மார்தட்டும் ஐசிசி!

கிரிக்கெட் விளையாட்டில் முதன்முறையாக சர்வதேச அளவிலான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீல்சன் ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் கடந்த 2017 நவம்பர் முதல் 2018 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 16 வயது முதல் 69 வயது வரையிலான பல்வேறு நபர்களிடம் இக்கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 19 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 ஆயிரத்து 600 பேரிடம் கிரிக்கெட் குறித்த பலதரப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி), தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில்,

உலகளவில் தற்போது தான் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சுமார் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களின் சராரசி வயது 34 ஆகும். இதில் 61 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். 

இதன்மூலம் குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள், குடும்பங்கள், பெண்கள் என அதிகளவிலான ரசிகர்களிடம் கிரிக்கெட் விளையாட்டை கொண்டு சேர்ப்பது தொடர்பான புது முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு பிரபலமில்லாத நாடுகளிலும் இதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வழி குறித்து திட்டமிட்டு வருகிறோம். 

தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளை விளையாடினாலும், 16 வயதுக்கு மேற்பட்ட பலர், இம்மூன்றையும் ரசிக்கின்றனர். அதிலும் ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்டவைகளுக்கு 95 சதவீதம் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

பெண்களின் கிரிக்கெட் போட்டிகளும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் 70 சதவீதம் பேர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் கண்டுகளிக்க விரும்புகின்றனர். டி20 வகை போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்க 87 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

மொத்தம் 70 சதவீதம் பேர் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தான் அதிகபட்சமாக 86 சதவீதம் பேர் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் விரும்புகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக 91 சதவீதம் பேர் ஒருநாள் போட்டிகளையும், பாகிஸ்தானில் அதிகபட்சமாக 98 சதவீதம் பேர் டி20 போட்டிகளையும் விரும்புகின்றனர். 

உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரிவாக டி20 திகழ்கிறது. இதை உலகம் முழுவதும் மொத்தம் 92 சதவீதம் பேர் விரும்புகின்றனர். அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளை 88 சதவீதம் பேர் நேசிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com