2001 கொல்கத்தா டெஸ்ட் வெற்றியை முன்பே கணித்து ஆச்சர்யப்படுத்திய கங்குலி மாமியார்!

மாமியார்களிடம் இதுதான் நடக்கும். தவறான சமயத்தில் தவறான கருத்தைச் சொல்வார்கள்... 
2001 கொல்கத்தா டெஸ்ட் வெற்றியை முன்பே கணித்து ஆச்சர்யப்படுத்திய கங்குலி மாமியார்!

2001 கொல்கத்தா டெஸ்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. முதல் மூன்று நாள்கள் ஆஸி. பக்கம் வலுவாக இருந்த ஆட்டம் அடுத்த இருநாள்களில் அப்படியே இந்தியா பக்கம் சாய்ந்தது. சாதனை வெற்றியை அடைந்தது இந்திய அணி.

மூன்றாவது நாள் முடிவில் கங்குலி உள்ளிட்ட அனைத்து இந்திய ரசிகர்களும் நம்பிக்கையிழந்த நேரத்தில் அந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை வைத்தவர், கங்குலியின் மாமியார். 

இதுகுறித்து ஒரு பேட்டியில் கங்குலி கூறியதாவது:

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக நாம் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தோம். அவ்வளவுதான் டெஸ்டை இழக்கவுள்ளோம், டெஸ்ட் தொடரை இழக்கவுள்ளோம், கேப்டன் பதவியையும் இழக்கவுள்ளோம் என்றெண்ணினேன். 

3-ம் நாளின் முடிவில் நடந்தது நன்கு நினைவுள்ளது. அப்போது இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகியிருந்தது. வீட்டிலிருந்து சமைத்த உணவுகளை ஹோட்டலுக்குக் கொண்டுவந்தார் என் மாமியார். அறையில் கிரிக்கெட் தவிர அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென, செளரவ் இந்த டெஸ்ட் ஆட்டத்தில் நீ வெல்வாய் என்றார். மாமியார்களிடம் இதுதான் நடக்கும். தவறான சமயத்தில் தவறான கருத்தைச் சொல்வார்கள். 

அவர் சென்றபிறகு, மனைவிக்கு போன் செய்து, ஏன் உன் அம்மா எப்போதும் இதுபோல செய்கிறார் என்றேன். அவர் என்னைச் சமாதானப்படுத்தினார். நடந்ததை மறக்கச் சொன்னார். அடுத்த இரு நாள்களில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான வெற்றியை நாங்கள் பெற்றோம். என் மாமியார், தான் சொன்ன வார்த்தைகளை நான் மறக்கமுடியாதபடி எப்போதும் ஞாபகப்படுத்துவார். 

கொல்கத்தா டெஸ்ட் முடிந்தபிறகு, அணியினரை என் வீட்டுக்கு விருந்துக்காக அழைத்திருந்தேன். பெஹலாவில் (கொல்கத்தா) நான் வசிக்கிறேன். என் மனைவியின் குடும்பத்தினர் அடுத்தடுத்த வீடுகளில் உள்ளார்கள். அணியினருடன் வீட்டுக்குள் நுழைகிறபோது என் மாமியார் பால்கனியில் நின்றுகொண்டு, புன்னகையுடன் ஒவ்வொரு வீரர்களிடமும், இது நடக்குமென்று செளரவிடம் இரு நாள்களுக்கு முன்பே சொன்னேன் என்று கூறிக்கொண்டிருந்தார். மூன்றாவது நாளின் இறுதியில் அவர் என்ன நினைத்துக்கொண்டு அப்படிச் சொன்னார் என எனக்குத் தெரியாது. லஷ்மண், டிராவிட் தவிர நாங்கள் யாரும் வெற்றியின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றார்.

'ஏ சென்சுரி இஸ் நாட் எனஃப்' என்ற பெயரில் கங்குலி சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் கடந்துவந்த பாதையில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com