இந்தியாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் தேவதை!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அருகே உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்-2) வானத்திலிருந்து இறங்கினார்
இந்தியாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் தேவதை!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அருகே உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்-2) வானத்திலிருந்து இறங்கினார் அந்த தேவதை. அவரை வரவேற்க குடும்பத்தினரும், ரசிகப் பெருமக்களும், உள்ளூர்வாசிகளும் வரவேற்புப் பகுதியில் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. இவர்களுடன் அந்த தேவதையிடம் பேட்டி காண்பதற்காக விடியோ கேமராக்களுடன் தொலைக்காட்சி ஊடகத்தினரும், பத்திரிகை செய்தியாளர்களும் ஒன்றுதிரண்டிருந்தனர். யார் அந்த தேவதை..! அவர் அப்படி என்ன சாதனை படைத்தார்? எதற்காக இத்தனை பேர் மகிழ்ச்சியுடன் அவரைக் காண காத்திருக்கின்றனர்?
பார்ப்போம் வாருங்கள். அந்த தேவதையின் பெயர் புத்தா அருணா ரெட்டி (22). ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்த வீராங்கனைதான் இந்த அருணா. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியப் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
2016-ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல்முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர் வரிசையில் மற்றொரு விருட்சமாகத் தோன்றியிருக்கிறார் அருணா.
விமானம் வந்தது. கழுத்தில் பதக்கத்துடன் சொந்த மாநிலத்தில் கால் வைத்த அருணா மீது வெள்ளை ஒளி படர்ந்தது. ஆம், அவரைச் சுற்றி தனது காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருந்தன கேமராக் கண்கள்.
மாலை அணிவித்தும், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்தும் அங்கிருந்தவர்கள் அன்பை வெளிப்படுத்தினர். வெற்றியைக் கொண்டாடும் வகையில் அருணாவை விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தாப்பூருக்கு (அவரது இல்லம் அமைந்துள்ள இடம்) திறந்த வாகனம் ஒன்றில் அழைத்து வந்தனர். வழியெங்கிலும் உற்சாகம்.
வீடு வந்து சேர்ந்த அவரைக் கண்டதும் கண்களில் திரண்டிருந்த ஆனந்தக் கண்ணீருடன் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் தாயார் சுபத்ரா. நாடறிந்த சாதனை மங்கையாக உருவெடுத்துள்ள அருணா, கடந்து வந்த பாதை சற்று கடினமானது.
எந்தத் துறையாக இருந்தாலும் ஒவ்வொரு வெற்றியாளருக்குப் பின்னாலும் இருக்கக் கூடிய அதே போராட்ட வாழ்க்கைதான். அப்படி என்ன கஷ்டம்? குடும்பப் பிரச்னை, நிதி நெருக்கடி எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதானே என்றாலும் ஒரு விளையாட்டு வீரர்கனைக்கு அதுவும் ஜிம்னாஸ்டிக்ஸில் சாதிக்க வேண்டும் என்றால் எத்தனை பெரிய சவால். குத்துச் சண்டை, மல்யுத்தம் போல் இதுவும் ஒட்டுமொத்த உடலையும் கட்டுக்குள் கொண்டுவந்து மனதை ஒரு நிலைப்படுத்தி விளையாடக் கூடிய விளையாட்டு ஆயிற்றே!
ஜிம்னாஸ்டிக்ஸை பொறுத்த வரையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் இவர் தேர்வு செய்தது வால்ட் பிரிவை.
அருணாவுக்கு 7 வயதாக இருக்கும்போது தந்தை நாராயண ரெட்டி இவரை ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்துவிட்டார். 1995-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்த இவர், விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது தந்தையின் கனவு. கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய அருணாவுக்கு உடற்பயிற்சித் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டான ஜிம்னாஸ்டிக்ஸ் மிகவும் பிடித்துப்போனது. அதற்காக அவர் படிப்பையும் விடவில்லை. தந்தை போல் கணக்குத் தணிக்கையாளர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் பி.காம் படித்து முடித்தார். சிறுவயதில் தனது பயிற்சியாளர்கள் ஸ்வர்ணலதா, ரவீந்தர், கிரிராஜ் ஆகியோரிடம் ஜிம்னாஸ்டிக்ஸின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பிறகு, பிரிஜ் கிஷோர் என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்தார் அருணா. தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் 3 முறை பதக்கங்களை வென்று தன்னை தேர்ந்த வீராங்கனையாக உருவாக்கிக் கொண்டார்.
பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் (2013), சீனாவின் நானிங் (2014), கனடாவின் மான்ட்ரீல் (2017) ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார். எனினும், தகுதிச்சுற்று வரை மட்டுமே செல்ல முயன்ற அருணாவில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற முடியவில்லை.
தனது விடாமுயற்சியாலும், தீவிர பயிற்சியாலும் இந்த ஆண்டு (2018) அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக மாறியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக மெல்போர்னில் நடைபெற்ற போட்டிக்கு பயிற்சியாளர் பிரிஜ் கிஷோரால் அருணாவுடன் செல்ல முடியவில்லை. எனினும், தனது தந்தைக்கும், குருவுக்கும், இந்த தேசத்துக்கும் தனியொரு மனுஷியாய் பெருமைத் தேடி தந்துவிட்டார் அருணா.
அவர் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குச் சென்றவுடன் 2010-ஆம் ஆண்டு காலமான தனது தந்தையின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இருகரம் கூப்பி வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணா, 'மெல்போர்னில் பதக்கம் வென்றபோது தேசத்துக்குப் பெருமையைத் தேடித் தந்துவிட்டேன் என்று பெருமைப்பட்டேன். ஆனால், ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுதான் என்று தெரியவில்லை. காமன்வெல்த் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளேன்' என்றார்.
இவருக்கு தெலங்கானா அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்து கௌரவித்துள்ளது.
அத்துடன், ரயில்வேயில் 'குரூப் சி' பிரிவில் அருணாவுக்கு பணியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளம்பெண்களுக்கு விளையாட்டுத் துறையில் முன்மாதிரியாக இருக்கும் வீராங்கனைகளான மேரி கோம், சானியா மிர்ஸா, மித்தாலி ராஜ், சாய்னா நேவால், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் உள்ளிட்டோரின் வரிசையில் இடம்பிடித்துள்ள அருணா ரெட்டி, காமன்வெல்த் போட்டியில் மட்டுமல்ல, ஒலிம்பிக்கிலும் இன்னும் பல ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடி தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com