உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: மீண்டும் தங்கம் வென்று மானு பேக்கர் சாதனை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் மானு பேக்கர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் மானு பேக்கர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.
மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறும் இப்போட்டியில் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் தங்கம் வென்றிருந்தார். 
இந்நிலையில், கலப்புப் பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில், மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் பங்கேற்றனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 476.1 புள்ளிகள் பெற்று இவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
இந்த பிரிவில் ஜெர்மனி அணி 475 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், 415 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்த பிரான்ஸ் வெண்கலமும் வென்றது.
11-ஆம் வகுப்பு மாணவியான மானு பேக்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இதை என்னால் நம்ப முடியவில்லை. சீனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 2 தங்கம் வெல்வேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை' என்றார்.
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியிலும் பதக்கம் வெல்ல இவர் தயாராகி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 61-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பேக்கர் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. ஆர்ஜென்டீனாவில் நடைபெற இருக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தை இவர் ஏற்கெனவே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹூலி கோஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர். இந்தப் பிரிவில் சீனா தங்கப் பதக்கமும், ருமேனியா வெள்ளியும் வென்றன. இந்தியாவின் ரவிக்குமார், அபூர்வி சந்தேலா 4-ஆவது இடத்தைப் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com