தேசிய தடகளம்: தமிழக வீரர் தருண் சாதனை

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் தேசிய சாதனை படைத்தார். அத்துடன் கோல்டு கோஸ்ட்
தேசிய தடகளம்: தமிழக வீரர் தருண் சாதனை

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் தேசிய சாதனை படைத்தார். அத்துடன் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்று வந்த 22-ஆவது ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தருண் 49.45 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்காக இந்திய தடகள சம்மேளனம் 49.45 விநாடிகளையே இலக்காக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜோசப் ஆபிரஹாம் கடந்த 2007-இல் 49.94 விநாடிகளில் இலக்கை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை, தருண் தற்போது முறியடித்துள்ளார்.
இந்நிலையில், இப்பிரிவில் 3 பதக்கங்களையும் தமிழகமே வென்றது. முதலிடத்தை தருண் பிடித்த நிலையில், சந்தோஷ் குமார் 50.14 விநாடிகளில் வந்து வெள்ளியும், ராமச்சந்திரன் 51.61 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர்.
இதனிடையே, மும்முறை தாண்டுதலில் அர்பிந்தர் சிங் 16.61 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். காமன்வெல்த் தகுதி இலக்கான 16.60 மீட்டரை கடந்தததால் அவர், அந்த வாய்ப்பையும் உறுதி செய்தார். இப்போட்டியில் நடப்பு தேசிய சாதனையாளரான ரஞ்சித் மஹேஸ்வரி, தனது கடைசி முயற்சியின்போது தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்து வெளியேறினார்.
கடைசி நாள் போட்டிகளில், மகளிருக்கான ஹெப்டத்லானில் பூர்ணிமா ஹெம்பிராம் 5815 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் 3 நிமிடம் 39.69 விநாடிகளில் வந்து முதலிடம் பிடித்தார். மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பி.யு.சித்ரா 4 நிமிடம் 15.25 விநாடிகளில் வந்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் சித்தாந்த் திங்கலயாவும், மகளிர் பிரிவில் சப்னா குமாரியும் சாம்பியன் ஆகினர். 
இந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது, மொத்தம் 9 தடகள வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்கை அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com