தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாக ஷமி மனைவி புகார்!

தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஷமி மனைவி புகார் கூறியுள்ளார்...
தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாக ஷமி மனைவி புகார்!

தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஷமி மனைவி புகார் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா நகர காவல் துறை இணை ஆணையர் பிரவீண் திரிபாதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 பேர் மீதும், கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்புணர்ச்சி ஆகிய பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த 5 பேர் மீதும் பிணையில் வெளிவர இயலும் இரண்டு பிரிவுகளின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். எனினும், தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முகமது ஷமி தனது முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களில் மறுப்பு தெரிவித்து வருகிறார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, முகமது ஷமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று ஹாசின் ஜஹான் இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, தன்னிடம் ஷமியின் அண்ணன் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் குவிவதால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ஹாசின் ஜஹான் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் யாரிடமும் எந்த உதவியும் கோரவில்லை. எனவே ஃபேஸ்புக் மூலமாக என் பிரச்னையைப் பகிர்ந்தேன். ஆனால் என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு ஏன் முடக்கப்பட்டுள்ளது? என் அனுமதி இல்லாமல் என் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. 

என் பிரச்னை தொடர்பாக பிசிசிஐயைத் தொடர்பு கொள்ளவுள்ளேன். என் வழக்கறிஞர் ஏற்கெனவே அவர்களிடம் பேசியிருப்பார். இந்தப் பிரச்னையை பிசிசிஐயிடம் கொண்டு செல்லாவிட்டால் பிறகு மற்ற வீரர்களும் இதே தவறைச் செய்யத் துணிவார்கள். பிசிசிஐ இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com