இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் : வெளியேறினார் ஜோகோவிச்

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் : வெளியேறினார் ஜோகோவிச்

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தகுதிச்சுற்று வீரரிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த ஜோகோவிச் தனது முதல் சுற்றில், உலகின் 109-ஆம் நிலை வீரரான ஜப்பானின் டேரோ டேனியலை எதிர்கொண்டார். கடுமையாகப் போராடிய ஜோகோவிச்சை 7-6 (7/3), 4-6, 6-1 என்ற செட்களில் டேனியல் வீழ்த்தினார்.
கடந்த ஆண்டில் வலது முழங்கை காயத்தால் அவதிப்பட்ட ஜோகோவிச், அதனால் பல்வேறு போட்டிகளை தவிர்த்து, இந்த ஆண்டில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில், இன்டியன் வெல்ஸ் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
தோல்வி குறித்து பேசிய ஜோகோவிச், 'இந்தத் தோல்வியை வழக்கத்துக்கு மாறான ஒன்று. இப்போட்டியில் நான் முதல் முறையாக விளையாடுவதுபோல் இருந்தது. எனது ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு ஒழுங்கை இழந்துவிட்டேன்' என்றார்.
ஃபெடரர் வெற்றி: இதனிடையே, நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை வென்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக, அவர்களிடையேயான ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டு அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு தொடர்ந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-3, 7-6 (8/6) என்ற செட்களில் வென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், ஜோகோவிச் குறித்து, 'ஜோகோவிச்சின் தடுமாற்றம் ஆச்சர்யமளிக்கவில்லை. சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வரும் சாம்பியனுக்கு இது இயல்பான ஒன்றுதான்' என்று கூறினார்.
உலகின் முதல் நிலை வீரரான ஃபெடரர், தனது 6-ஆவது இன்டியன் வெல்ஸ் பட்டத்துக்காக களம் கண்டுள்ளார். இப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினால் அவர் தனது நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக் கொள்வார்.
இதனிடையே, உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், உலகின் 85-ஆம் நிலை வீரரான போர்ச்சுகலின் ஜாவ் செளசாவிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதர 2-ஆவது சுற்றுகளில், குரோஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் ஜேக் சாக், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ ஆகியோர் வெற்றி கண்டனர்.
சைமோனா, கரோலினா முன்னேற்றம்
இன்டியன் வெல்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சைமோனா 1-6, 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் கரோலின் டோல்ஹைடை வீழ்த்தினார். 
உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான கரோலினா 7-5, 5-7, 6-3 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாயை வென்றார். இதர சுற்றுகளில் அமெரிக்க ஓபன் நடப்புச் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

யூகி பாம்ப்ரி அசத்தல்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, உலகின் 12-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் லூகாஸ் புய்லேவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். இந்த ஆட்டத்தை ஒரு மணி 19 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த யூகி, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
உலகின் 110-ஆம் நிலையில் இருக்கும் யூகியின் டென்னிஸ் வரலாற்றில் இது அதிகபட்ச வெற்றியாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில் உலகின் 22-ஆம் நிலை வீரர் கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தியதே அவரது அதிகபட்சமாக இருந்தது. யூகி தனது 3-ஆவது சுற்றில் உலகின் 21-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கெர்ரியை சந்திக்கிறார்.

போபண்ணா ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாசெலின் ஜோடி தனது முதல் சுற்றிலேயே 7-5, 2-6, 4-10 என்ற செட்களில் லக்ஸம்பர்க்கின் கில்லெஸ் முல்லர்-அமெரிக்காவின் சாம் கெர்ரி இணையிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com