முத்தரப்பு டி20: இலங்கைக்கு இந்தியா பதிலடி

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முத்தரப்பு டி20: இலங்கைக்கு இந்தியா பதிலடி

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலமாக, இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.
கொழும்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் ஒருமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டத்தின் ஓவர்கள் 19-ஆக குறைக்கப்பட்டது.
இதில் முதலில் பேட் செய்த இலங்கை 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இலங்கையில் தொடக்க வீரர்களில் ஒருவரான குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் அடித்தார். குணதிலகா 17, குசல் பெரேரா 3, உபுல் தரங்கா 22, கேப்டன் திசர பெரேரா 15 ரன்கள் அடித்தனர். ஜீவன் மென்டிஸை ஒரு ரன்னில் போல்டாக்கினார் வாஷிங்டன் சுந்தர். டாசன் ஷனகா 19, அகிலா தனஞ்ஜெயா 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக சமீரா டக் அவுட்டானார்.
சுரங்கா லக்மல் 5 ரன்களுடனும், நுவான் பிரதீப் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர் 4, வாஷிங்டன் சுந்தர் 2, ஜெயதேவ் உனத்கட், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
மணீஷ் & தினேஷ் அசத்தல்: பின்னர் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் 11 ரன்களில் வெளியேற, உடன் வந்த ஷிகர் தவன் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்கள் இருவருமே தனஞ்ஜெயா ஓவரில் வீழ்ந்தனர்.
பின்னர் வந்து சற்று நிலைத்த லோகேஷ் ராகுல் 18 ரன்கள் எடுத்திருந்தபோது தனது காலால் ஸ்டம்ப்பை தட்டி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களே சேர்த்தார். இறுதியாக மணீஷ் பாண்டே-தினேஷ் கார்த்திக் கூட்டணி அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.
மணீஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 42, தினேஷ் 5 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2, நுவான் பிரதீப், ஜீவன் மென்டிஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சுருக்கமான ஸ்கோர்
இலங்கை இன்னிங்ஸ்
19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152
குசல் மென்டிஸ்-55, தரங்கா-22, ஷனகா-19, 
லக்மல்-5*, நுவான்-0*
பந்துவீச்சு: 
ஷர்துல்-4/27, சுந்தர்-2/21, சங்கர்-1/30
இந்தியா இன்னிங்ஸ்
17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153
மணீஷ்-42*, தினேஷ்-39*, ரெய்னா-27, ராகுல்-18.
பந்துவீச்சு: 
தனஞ்ஜெயா-2/19, நுவான்-1/30, ஜீவன்-1/34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com