இன்டியன் வெல்ஸ்: சிலிச்சை வெளியேற்றினார் கோல்ஷ்ரெய்பர்

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி கண்டு
சிலிச்சுக்கு சர்வ் செய்யும் பிலிப்.
சிலிச்சுக்கு சர்வ் செய்யும் பிலிப்.

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த சிலிச், தனது 3-ஆவது சுற்றில் 4-6, 4-6 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 31-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரெய்பரிடம் தோல்வி கண்டார். கோல்ஷ்ரெய்பரை இத்துடன் 11 முறை சந்தித்துள்ள சிலிச், அவரிடம் தனது 5-ஆவது வெற்றியை இழந்துள்ளார்.
வெற்றி குறித்து பேசிய கோல்ஷ்ரெய்பர், 'முடிந்தவரையில் ஆட்டத்தை விரைவாக முடிக்க முயற்சித்தேன். ஆக்ரோஷமாக விளையாடினேன். முக்கியமான தருணங்களில் புள்ளிகளை கைப்பற்றியதால் வெற்றி வசமானது. அதிலும் 2 செட்களில் ஆட்டத்தை முடித்தது முக்கிய காரணம்' என்றார்.
கோல்ஷ்ரைபர் தனது 4-ஆவது சுற்றில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டை சந்திக்கிறார். மற்றொரு 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜேக் சாக் 6-7(6/8), 6-4, 4-6 என்ற செட்களில் ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸிடம் தோற்றார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை வீழ்த்தினார்.
கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-5, 4-6, 6-2 என்ற செட்களில் போர்ச்சுகலின் ஜாவ் செளசாவையும், ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயர் 6-4, 6-1 என்ற செட்களில் ஜப்பானின் டேரோ டேனியலையும் வீழ்த்தினர். டேரோ டேனியல் தனது முந்தைய சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீழ்ந்தார் வோஸ்னியாக்கி
மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 5-7 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினாவிடம் தோற்றார். ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கரோலின் கார்சியாவை வென்றார்.
போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 7-6(7/2) என்ற செட்களில் அமெரிக்காவின் அமான்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர் ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்திக்கிறார்.
இதனிடையே, போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 7-6(8/6), 6-4 என்ற செட்களில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.

பாம்ப்ரி தோல்வி
இன்டியன் வெல்ஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினார். அதில் அவர் உலகின் 21-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் கெர்ரியிடம் 7-6(7/4), 4-6, 4-6 என்ற செட்களில் வீழ்ந்தார்.
2 மணி 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி 15-இல் 11 பிரேக் பாய்ண்ட்டுகளை தக்கவைத்துக் கொண்டார். தற்போது உலகின் 110-ஆம் நிலையில் இருக்கும் யூகி பாம்ப்ரி, இப்போட்டியில் கிடைத்த 45 புள்ளிகளின் மூலமாக மீண்டும் முதல் 100 இடங்களுக்குள்ளாக வருவார் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com