முத்தரப்பு டி20: வாஷிங்டன் வீச்சில் வங்கதேசம் வீழ்ச்சி

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டாகும் தமிம் இக்பால்.
வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டாகும் தமிம் இக்பால்.

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பேட்டிங்கில் ரோஹித் சர்மா அசத்த, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் பலம் காட்டினார்.
கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் கூட்டணி களம் கண்டது. இதில் தவன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 35 ரன்கள் சேர்த்தார். அவரை ரூபெல் ஹுசைன் போல்டாக்கி வெளியேற்றினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரோஹித்துடன் கூட்டணி சேர்ந்தார் ரெய்னா. இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன்கள் அடித்தது. ரெய்னா அரைசதத்தை நெருங்கிய நிலையில் ரூபெல் ஹுசைன் பந்துவீச்சில் செளம்யா சர்க்காரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
30 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களத்துக்கு வர, ரூபெல் ஹுசைனால் ரன் அவுட் செய்யப்பட்டார் ரோஹித் சர்மா. அவர் 61 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 89 ரன்கள் சேர்த்திருந்தார். ரெய்னா, ரோஹித் இருவருமே கடைசி ஓவரில் வீழ்ந்தனர். தினேஷ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச தரப்பில் ரூபெல் ஹுசைன் 2 விக்கெட் எடுத்திருந்தார்.
முஷ்ஃபிகர் முயற்சி வீண்: பின்னர் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 27, உடன் வந்த லிட்டன் தாஸ் 7, செளம்யா சர்கார் 1 ரன்னில் வீழ்ந்தனர். இந்த 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் சாய்த்தார். கேப்டன் மஹ்முதுல்லா 11, சபிர் ரஹ்மான் 27, மெஹதி ஹசன் 7 ரன்கள் எடுத்தனர். முஷ்ஃபிகர் ரஹிம் 72 ரன்களோடும் (55 பந்துகள், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), அபு ஹைதர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஷர்துல் தாக்குர், யுவேந்திர சாஹல், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
சுருக்கமான ஸ்கோர்
இந்திய இன்னிங்ஸ்
20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176
ரோஹித்-89, ரெய்னா-47, தவன்-35, தினேஷ்-2*
பந்துவீச்சு: ரூபெல் ஹுசைன்-2/27
வங்கதேச இன்னிங்ஸ்
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159
முஷ்ஃபிகர்-72*, தமிம்-27, சபிர்-27, அபு-0*
பந்துவீச்சு: சுந்தர்-3/22, சாஹல்-1/21, தாக்குர்-1/37, 
சிராஜ்-1/50.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com