வெற்றிக்குப் பிறகு, வங்கதேச அணி ஓய்வறையின் கண்ணாடிக் கதவு உடைப்பு: தொடரும் பரபரப்பு!

வங்கதேச வீரர்களின் ஓய்வறைக் கதவு உடைக்கப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... 
வெற்றிக்குப் பிறகு, வங்கதேச அணி ஓய்வறையின் கண்ணாடிக் கதவு உடைப்பு: தொடரும் பரபரப்பு!

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

வங்கதேச இன்னிங்ஸின்போது கடைசி ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசப்பட்டது. இரண்டாவதாக வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் என சிக்னல் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதை மற்றொரு நடுவர் அங்கீகரிக்க மறுத்தார். கடைசியில் அந்தப் பந்து நோ பால் அல்ல என முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரிங்ஸ் கொண்டு வந்த வங்கதேச சப் ஃபீல்டர்ஸூக்கும், இலங்கை ஃபீல்டர்ஸூக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பினரையும் நடுவர்கள் சமாதானம் செய்ய முயலும்போது, பவுண்டரி லைன் அருகே கடும் கோபத்தில் இருந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பெவிலியன் திரும்புமாறு தனது பேட்ஸ்மேன்களை அழைத்தார்.

இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேறியிருந்தால் வங்கதேசம் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். எனினும், ஒருவழியாக கேப்டன் ஷாகிப் சமாதானம் ஆனார். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினார்கள். பின்னர் பேட் செய்த மஹ்முதுல்லா பவுண்டரி, சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் வங்கதேச வீரர்களின் ஓய்வறைக் கதவு உடைக்கப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வறையின் கண்ணாடிக் கதவை, வங்கதேச வெற்றிக்குப் பிறகு அந்த அணி வீரர்களில் சிலர் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட், சிசிடிவி வீடீயோக்களின் பதிவைக் கோரியுள்ளார். தங்கள் வீரர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால் அதற்குரிய இழப்பீடை வழங்குவதாக வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி கடுமையான தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நாளை நடக்கும் இறுதிச்சுற்று ஆட்டத்தைத் தவறவிடவும் வாய்ப்பு உண்டு. ஐசிசி தன்னுடைய முடிவை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்த வீரர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com