ஒரு தவறு செய்தால் கூட நான் வெளியேற்றப்படுவேன்: தினேஷ் கார்த்திக்

தற்போதைய காலகட்டத்தில் ஒரு தவறு செய்தால் கூட நான் வெளியேற்றப்படுவேன் என்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஒரு தவறு செய்தால் கூட நான் வெளியேற்றப்படுவேன்: தினேஷ் கார்த்திக்

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள நிதாகஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

தற்போதைய சூழலில் ஒவ்வொரு போட்டியும் எனக்கு மிக முக்கியமானது. இதில் ஒரேயொரு தவறு செய்தால் கூட நான் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவேன். எனவே ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. இதில் அழுத்தம் இருந்தாலும் அதை நான் சவாலாக எடுத்துக்கொள்கிறேன். உலகக் கோப்பை நடைபெற இன்னும் போதிய கால அவகாசம் உள்ளது. எனவே நான் அதுகுறித்து சிந்திக்கவில்லை.

நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமானதாகக் கருதுகிறேன். அதில் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். வாய்ப்பு அளித்தால் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் சவால்களில் இருந்து சாக்கு-போக்கு சொல்லி வெளியேற விரும்பவில்லை. மாறாக அதனை வெற்றியுடன் செய்து முடிக்க விரும்புகிறேன். 

இலங்கை அணியின் ஆடுகளங்கள் சவால் நிறைந்ததாக உள்ளது. இங்கு பந்து செல்லும் திசையை கணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தான் அதிக பந்துகள் தடுப்பாட்ட முறையில் ஆடப்படுகின்றன. சமீபத்தில் தான் வங்கதேச அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து. அப்போது முதல் அவர்களின் ஆட்டத்திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. களத்தில் எதிரணிக்கு கடும் சவால்களை அளிக்கின்றனர். குறிப்பாக ஆசிய மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் வங்கதேசத்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்து வருகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற எப்போதும் போன்ற பயிற்சிகளிலேயே இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டோம். குறிப்பாக வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்துடன் வென்றால் அவர்கள் 2-ஆம் கட்ட அணி என்று சுலபமாக கூறிவிடுகின்றனர். அதுவே தோல்வியுற்றால் கடுமையான விமரிசனங்களை முன்வைக்கின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com