இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ அனுமதி

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ அனுமதி

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த பிசிசிஐ சனிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பிசிசிஐ கமிட்டி கூட்டம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சௌரவ் கங்குலி, பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி, நிர்வாக பொது மேலாளர்கள் சபா கரீம் மற்றும் ராஜன் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐசிசி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க துபை சென்றுள்ளதால் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் சொந்த காரணங்களுக்காக பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா ஆகியோர் பங்கேற்கவில்லை. 

இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்திய அணி பங்கேற்கும் அடுத்த சீசனுக்கான கிரிக்கெட் தொடர்களையும் வரைமுறைப்படுத்தியது. அப்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அக்டோபர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராஜ்கோட் அல்லது ஹைதராபாத்தில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிசிசிஐ வழங்கியுள்ள இந்த அனுமதி, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாகத்தினரின் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு நடத்தப்படவுள்ளது.

அடுத்த சீசன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஜுன் 14-ம் தேதி பெங்களூருவில் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருடன் தொடங்குகிறது. இது அந்த அணிக்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். பின்னர் செப்டம்பர் 18-ந் தேதி முதல் ஆசிய கோப்பை நடைபெறவுள்ளது. இதில் இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் அனுமதிக்குப் பிறகு பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து தெரியவரும். 

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுடன் மும்பை, புணே, திருவனந்தபுரம், இந்தூர், குவாஹட்டி ஆகிய இடங்களில் 5 ஒருநாள் மற்றும் கொல்கத்தா, சென்னை, கான்பூர் அல்லது லக்னோ ஆகிய இடங்களில் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பின்னர் அங்கிருந்து நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மோதுகிறது.

பின்னர் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. மொஹாலி, தில்லி, நாக்பூர், ஹைதராபாத், ராஞ்சி, விசாகப்பட்டினம், பெங்களூரு ஆகிய இடங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது. பின்னர் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்பின்னர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com