சவால்களை விரும்பும் ஷர்துல் தாக்குர்!

புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் வரிசையில் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர்.
சவால்களை விரும்பும் ஷர்துல் தாக்குர்!

புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் வரிசையில் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர்.
கிரிக்கெட்டில் சவால்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும், எந்த அணியாக இருந்தாலும் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகம் இருக்கும்.
இந்திய அணி முன்பெல்லாம் வேகப்பந்து வீச்சில் பலவீனமாக இருந்து வந்தது. பேட்டிங்கில் அசரடிக்கும் அளவுக்கு நமது வீரர்கள் வேகப்பந்து வீச்சில் ஜொலிப்பது அரிதாகவே இருந்து வந்தது. பருவ நிலை, ஆடுகளங்களில் பந்து பவுன்ஸ் ஆவது உள்ளிட்ட சவால்கள் நிறைந்த வெளிநாட்டு மைதானங்களில் நமது பந்துவீச்சாளர்கள் சற்று தடுமாறியதும் உண்டு. அந்த நிலைமை தற்போது மாறி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஜாஹீர் கான், அகர்கர், நெஹரா ஆகியோரின் வரிசையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர்.
ஷர்துல் தாக்குரை கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண்ணை (10) பயன்படுத்தி விளையாடி சர்ச்சைக்குள்ளானவர் என்றால் அவ்வளவு எளிதில் யாரும் இவரை மறந்துவிட முடியாது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஷர்துல் தாக்குரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், அந்தத் தொடரில் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அதன்பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் ஷர்துலுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் அவர் தனது ஜெர்சியில் எண் 10-ஐ பயன்படுத்தி விளையாடினார்.
அதன்பிறகு, அந்த எண்ணை சச்சினுக்காக அர்ப்பணிக்க பிசிசிஐ முன்வந்ததைத் தொடர்ந்து எண் 54-ஐ ஷர்துல் பயன்படுத்தி வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷர்துல், பந்து வீச்சில் சிறப்பான உத்தியைக் கையாண்டு வருகிறார். அதாவது, ""நக்கிள் பால்'" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஒருவகையான பந்துவீச்சு முறையை அவர் கையாள்கிறார். இந்த வகை பந்து வீச்சு என்பது, பந்துவீச்சாளர் வேகமாக ஓடிவந்து பந்து வீசினாலும், கை விரல்களை சாமர்த்தியமாக சுழற்றுவதுடன் பந்தை மெதுவாக வீசுவதும்தான் இதன் தனிச்சிறப்பு.
புவனேஸ்வர் குமாரும் இந்த வகை பந்துவீச்சையே கையாண்டு விக்கெட்டுகளை அள்ளி வருகிறார்.
இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு தாற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3.3 ஓவர்கள் வீசி 42 ரன்கள் வாரி வழங்கினாலும் ஒரு விக்கெட்டை கூட ஷர்துல் கைப்பற்றவில்லை. ஆனாலும், மீண்டும் இலங்கையுடன் மோதியபோது 4 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற, ஷர்துல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
மூத்த வீரர்கள் ஓய்வில் இருக்கும் வேளையில் ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ""இதை நான் சவாலாகவே எடுத்துக் கொள்கிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவேன். சவால்களை நான் விரும்புகிறேன். "நக்கிள்' பந்துவீச்சு முறையை தொடர்ந்து செய்துவரும் பயிற்சியின் மூலம் கைவரப் பெற்றேன்' என்று பதிலளித்தார்.
இந்த முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஷர்துலுக்கு, இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com