இன்டியன் வெல்ஸ்: சாம்பியன் ஆனார் டெல் போட்ரோ இறுதிச்சுற்றில் ஃபெடரரை வீழ்த்தினார்

அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, நடப்புச் சாம்பியனாக இருந்த
இன்டியன் வெல்ஸ்: சாம்பியன் ஆனார் டெல் போட்ரோ இறுதிச்சுற்றில் ஃபெடரரை வீழ்த்தினார்

அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, நடப்புச் சாம்பியனாக இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
உலகின் 8-ஆம் நிலை வீரராக இருந்த டெல் போட்ரோ, இறுதிச்சுற்றில் 6-4, 6-7(8/10), 7-6(7/2) என்ற செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஃபெடரரை வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பிறகு டெல் போட்ரோ கூறியதாவது:
இந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் ஆனதை நம்ப இயலவில்லை. எனது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் 3-ஆவது முறையாக அறுவைச் சிகிச்சை செய்யும்போது, டென்னிஸை கைவிடும் மனநிலையில் நான் இருந்ததை அனைவரும் அறிவார்கள்.
அதிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக முயற்சிகள் மேற்கொண்டேன். எனது ஆட்டத்தை எந்த அளவுக்கு மேம்படுத்த இயலும் என்பதை அறிய விரும்பினேன்.
தற்போது எனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். தரவரிசை குறித்து கருத்தில் கொள்ள விரும்பவில்லை. என்னால் முடிந்த வரையில் பட்டங்கள் வெல்ல நினைக்கிறேன். அதற்கு இந்த ஆண்டு முழுவதும் நான் உடல்நலத்துடனும், நினைத்த போட்டிகளில் விளையாடும் உடல்தகுதியுடனும் இருக்க வேண்டும். எனது இந்த தொடர் வெற்றிகள் எனக்கே ஆச்சர்யமளிக்கின்றன என்று டெல் போட்ரோ கூறினார்.
ஃபெடரரை இத்துடன் 25 முறை சந்தித்துள்ள டெல் போட்ரோ, தனது 7-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். 

2-ஆவது ஏடிபி பட்டம்
டெல் போட்ரோ தனது டென்னிஸ் வாழ்க்கையில் வெல்லும் 2-ஆவது ஏடிபி பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 22-ஆவது ஒற்றையர் பட்டம்.

தரவரிசையில் முன்னேற்றம்
இன்டியன் வெல்ஸ் பட்டத்தை கைப்பற்றியுள்ள நிலையில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையின் ஒற்றையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறிய டெல் போட்ரோ, தற்போது 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் இடதுகை மணிக்கட்டுப் பகுதி காயம் காரணமாக அவதிப்பட்ட டெல் போட்ரோ, அதிக போட்டிகளில் பங்கேற்காததாலும், பங்கேற்ற போட்டிகளில் தோல்வி கண்டதாலும் தரவரிசையில் 1,045-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார்.
அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சை, தொடர் முயற்சி ஆகியவற்றால் காயத்திலிருந்து மீண்டு வந்து, தற்போது முதல் 10 இடங்களுக்குள்ளாக அவர் நிலைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரர் சாதனைக்கு தடை
டெல் போட்ரோ தனது இந்த வெற்றியின் மூலமாக, 6-ஆவது முறை இன்டியன் வெல்ஸ் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்கும் ஃபெடரரின் முயற்சியை தகர்த்தார். மேலும், இந்த சீசனின் தொடக்கம் முதல் 17 தொடர் வெற்றிகளை பெற்றிருந்த ஃபெடரருக்கு, அவரது 18-ஆவது ஆட்டத்தில் தோல்வியளித்தார் டெல் போட்ரோ.

முதல் ஜப்பானிய சாம்பியன் நவோமி
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன்மூலமாக, இன்டியன் வெல்ஸ் பட்டத்தை வெல்லும் முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
உலகின் 44-ஆம் நிலையில் இருந்த ஒசாகா இறுதிச்சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில், உலகின் 20-ஆம் நிலையில் இருக்கும் கசாட்கினாவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 70 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய நவோமி, 'இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு புள்ளியையும் கைப்பற்றுவது கடினமாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். எனவே, எந்தவொரு இடத்திலும் தவறு செய்துவிடக் கூடாது என கவனமாக ஆடினேன்' என்றார்.

4-ஆவது வீராங்கனை ஒசாகா
இன்டியன் வெல்ஸ் டென்னிஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய, போட்டித் தரவரிசையில் வராத 4-ஆவது வீராங்கனை நவோமி ஆவார். கடைசியாக, 2005-இல் பெல்ஜியத்தின் கிம் கிலிஜ்ஸ்டர்ஸ் 
இதுபோன்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

22-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச டென்னிஸ் தரவரிசையின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 44-ஆவது இடத்தில் இருந்த நவோமி, இன்டியன் வெல்ஸ் பட்டம் வென்றதை அடுத்து 22 இடங்கள் முன்னேறி, 22-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

முதல் முறை...
இன்டியன் வெல்ஸ் இறுதிச்சுற்றில் விளையாடியது, நவோமி- கசாட்கினா ஆகிய இருவருக்குமே இது முதல் முறையாகும். அதேபோல், கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு 21 வயதுக்கு குறைவான இருவர் இறுதிச்சுற்றில் மோதுவதும் இது முதல் முறையாகும். முன்னதாக, 2001-இல் செரீனா வில்லியம்ஸ்-கிம் கிலிஜ்ஸ்டர்ஸ் இதுபோன்று இறுதிச்சுற்றில் மோதினர். அதில் செரீனா வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com