ஐசிசி தரவரிசை: சாஹல், வாஷிங்டன் முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் டி20 பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் இந்தியாவின் யுவேந்திர சாஹல், 2-ஆவது இடத்துக்கும், வாஷிங்டன் சுந்தர் 31-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
ஐசிசி தரவரிசை: சாஹல், வாஷிங்டன் முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் டி20 பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் இந்தியாவின் யுவேந்திர சாஹல், 2-ஆவது இடத்துக்கும், வாஷிங்டன் சுந்தர் 31-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்தியாவை சாம்பியனாக்கிய தினேஷ் கார்த்திக் 126-ஆவது இடத்திலிருந்து 95-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், முதல் முறையாக 246 புள்ளிகளை பெற்றார். 
நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா சாம்பியன் ஆனது. இந்நிலையில், அத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில், திங்கள்கிழமை வெளியான ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி, இந்திய லெக் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் 12 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். மேலும், தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 706 புள்ளிகளை பெற்றார். இதேபோல், ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் 151 இடங்கள் முன்னேறி 31-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
முத்தரப்பு டி20 தொடரின் 5 ஆட்டங்களிலுமே களம் கண்ட இவர்கள் இருவரும் மொத்தமாக தலா 8 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதில் வாஷிங்டன் சுந்தர் குறிப்பிடத்தக்க வகையில் பவர்பிளே வாய்ப்பிலும் அபாரமாக பந்துவீசினார். அவரது பந்துவீச்சு சராசரி 5.70-ஆகவும், சாஹலின் சராசரி 6.45-ஆகவும் இருந்தது.
இதனிடையே, இதர இந்தியர்களான ஜெயதேவ் உனத்கட் மற்றும் ஷர்துல் தாக்குர், இலங்கை அணியின் அகிலா தனஞ்ஜெயா, வங்கதேசத்தின் ருபெல் ஹுசைன் ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே, தங்களது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக அதிக புள்ளிகள் பெற்றனர்.
இதில் உனத்கட் 26 இடங்கள் முன்னேறி 52-ஆவது இடத்திலும், ஷர்துல் தாக்குர் 85 இடங்கள் முன்னேறி 76-ஆவது இடத்திலும் உள்ளனர். உனத்கட் 435, ஷர்துல் 358 புள்ளிகளுடன் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக் தவிர, ஷிகர் தவன், மணீஷ் பாண்டே ஆகிய இந்தியர்களும் முன்னேற்றம் கண்டனர். இலங்கை அணியில் குசல் பெரேரா, குசல் மென்டிஸ் ஆகியோரும், வங்கதேச அணியில் முஷ்ஃபிகர் ரஹிமும் முன்னேறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com