என்னை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? ரபாடா மீதான தீர்ப்பு குறித்து ஸ்டீவ் ஸ்மித் கடும் அதிருப்தி!

காணொளியில் தெரிந்ததை விடவும் விக்கெட் எடுத்தவுடன் ரபாடா என்மீது அதிகமாகவே மோதினார் என நினைக்கிறேன்... 
என்னை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? ரபாடா மீதான தீர்ப்பு குறித்து ஸ்டீவ் ஸ்மித் கடும் அதிருப்தி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்று தொடர் சமநிலையில் உள்ளது. இதில் போர்ட் எலிசபெத்தில் இம்மாதம் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், ரபாடா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

அந்த மகிழ்ச்சி வெறியில் ரபாடா ஸ்டீவ் ஸ்மித் தோள்பட்டையில் மோதினார். இதுதொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ரபாடாவுக்கு எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டதுடன், போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது தரவரிசைப் புள்ளிகளில் 3-ம் குறைக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரபாடா ஐசிசியில் மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணையை நீதித்துறை ஆணையர் மைக்கெல் ஹெரான் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தினார். அப்போது ரபாடாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் ஹெரான் வெளியிட்ட முடிவின் படி, எஞ்சிய 2 போட்டிகளில் ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. மேலும், அவரது போட்டி ஊதியத்தில் விதிக்கப்பட்ட 50 சதவீத அபராதம், 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மேலும், 3 தரவரிசை புள்ளிகளுக்குப் பதிலாக, ஒரு தரவரிசை புள்ளி குறைக்கப்பட்டது. எனினும், விதிகளை மீறியதாக அவர் இன்னும் ஓர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பட்சத்தில், அவருக்கு தடை விதிக்கப்படும் என்று முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புதிய தீர்ப்புக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்தத் தீர்ப்பு கிரிக்கெட்டில் எதிரணி வீரருடன் உடல் ரீதியான மோதலை உருவாக்கும். ஐசிசி இதைத் தடுப்பதற்கென விதிமுறைகளைக் கொண்டுள்ளது. சரிதானே? ஆடுகளத்தில் என் தோள்பட்டையில் அவர் தெளிவாக உரசினார். ஆடுகளத்தில் எதிரணி வீரர்களின் விக்கெட்டை எடுத்தால் அவர்களுக்கான இடத்துக்குச் செல்லுங்கள் என என் பந்துவீச்சாளர்களுக்குச் சொல்லமாட்டேன். விளையாட்டில் இதற்கு இடமில்லை.  

காணொளியில் தெரிந்ததை விடவும் விக்கெட் எடுத்தவுடன் ரபாடா என்மீது அதிகமாகவே மோதினார் என நினைக்கிறேன். அதை நான் சட்டை செய்யவில்லை. போரில் வென்றது போல இருந்தார். அதற்கு ஏன் அதீதமாகக் கொண்டாட வேண்டும்? போட்டியில் நீங்கள் வென்றுவீட்டீர்கள். பிறகு ஏன் பேட்ஸ்மேனுக்கு முகத்தில் அருகே வந்து கொண்டாடவேண்டும்? இனி வீரர்கள் எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியாக மோதுவதை அனுமதித்து அதற்குத் தண்டனை விதிக்கப்பட்டால் பல மேல்முறையீடுகளுக்கும் கொண்டு செல்லும். 

இச்சம்பவத்தில் நானும் உள்ளேன். ஆனால் என்னை ஏன் விசாரணை செய்யவில்லை? இது மிகவும் சுவாரசியமானது. தொடர் நடுவர் மார்டின் குரோவ் மிக அற்புதமாகத் தன் பணிகளைச் செய்தார். நான் அவர் இடத்தில் இருந்தால் மிகவும் தர்மசங்கடத்தில் இருப்பேன். இப்போது புதிய நடுவர் வருகிறார். அவர் மூத்த வீரர்களுடன் பேசி இந்தத் தொடர் நல்லமுறையில் தொடர உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com