தடையிலிருந்து தப்பினார் ரபாடா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது
தடையிலிருந்து தப்பினார் ரபாடா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்று தொடர் சமநிலையில் உள்ளது.
இதில் போர்ட் எலிசபெத்தில் இம்மாதம் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், ரபாடா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
அந்த மகிழ்ச்சி வெறியில் ரபாடா ஸ்டீவ் ஸ்மித் தோள்பட்டையில் மோதினார். இதுதொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ரபாடாவுக்கு எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டதுடன், போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது தரவரிசைப் புள்ளிகளில் 3-ம் குறைக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரபாடா ஐசிசியில் மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணையை ஜுடிஷியல் ஆணையர் மைக்கெல் ஹெரான் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தினார். அப்போது ரபாடாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் ஹெரான் வெளியிட்ட முடிவின் படி, எஞ்சிய 2 போட்டிகளில் ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. மேலும், அவரது போட்டி ஊதியத்தில் விதிக்கப்பட்ட 50 சதவீத அபராதம், 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மேலும், 3 தரவரிசை புள்ளிகளுக்குப் பதிலாக, ஒரு தரவரிசை புள்ளி குறைக்கப்பட்டது.
எனினும், விதிகளை மீறியதாக அவர் இன்னும் ஓர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பட்சத்தில், அவருக்கு தடை விதிக்கப்படும் என்று முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com