கொச்சி கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம்: சச்சின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது...
திருவனந்தபுரத்திலுள்ள கிரிக்கெட் மைதானம்
திருவனந்தபுரத்திலுள்ள கிரிக்கெட் மைதானம்

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நவம்பர் 1 அன்று இந்தியா - மே.இ. அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி, கொச்சியில் நடைபெறுவதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

இதற்கு உடனடியாக கேரள கால்பந்து ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். கடந்த வருடம் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தால் கால்பந்துக்கென அமைக்கப்பட்ட புல்தரை பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார்கள். ஜூனியர் உலகக் கோப்பைக்குப் பிறகு ஐஎஸ்எல் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன. எனவே இது கால்பந்து மைதானமாகவே நீடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாக உள்ளது. கேரள ஐஎஸ்எல் அணியின் வீரரான சிகே வினீத்தும் இதுகுறித்த தன் கருத்தை வெளியிட்டார். இதையடுத்து இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியும் கொச்சி கால்பந்து மைதானத்தையும் அதன் ஆடுகளத்தையும் காப்பாற்றவேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார்.

இவர்களுக்குப் பிறகு பிரச்னையைப் பிரபல கிரிக்கெட் வீரரும் கேரள ஐஎஸ்எல் அணியின் துணை உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர் கையில் எடுத்தார். சர்வதேசக் கால்பந்து சங்கம் அங்கீகரித்த கால்பந்து மைதானம் குறித்து கவலைப்படுகிறேன். கேரள கிரிக்கெட் சங்கம் சரியான முடிவை எடுக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் கிரிக்கெட்டும் கொச்சியில் கால்பந்தும் நீடிக்கமுடியும். பிசிசிஐயின் வினோத் ராய், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். கிரிக்கெட் மற்றும் கால்பந்து ரசிகர்கள் என இரு தரப்பினரும் கவலைப்படக்கூடாது என்றார். இதற்கு செளரவ் கங்குலியும் ஆதரவு தெரிவித்து, பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மாநில அரசுடன் கேரள கிரிக்கெட் சங்கம் விவாதித்தது. அதன்முடிவில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கொச்சிக்குப் பதிலாக திருவனந்தபுரத்தில் நடத்த கேரள கிரிக்கெட் சங்கம் ஒப்புக்கொண்டது. இதன்மூலம் கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com